ஒரே நாளில் 30 மில்லியன் ரசிகர்கள்:
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் 5 முறை பாலன் டிஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்கள் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதலிடத்தில் இருக்கிறார். எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
கோல்டன் பட்டன்:
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ அறிவித்த சில மணி நேரங்களிலேயே 10 மில்லியன் ரசிகர்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைபர்கள் செய்தனர். இதனைத் தொடர்ந்து ரொனால்டோவிற்கு யூடியூப் தரப்பில் இருந்து கோல்டன் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ரொனால்டோவிற்கு யூடியூப் சேனல் தொடங்கி ஒரு நாளில் 30 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் கிடைத்துள்ளனர். யூடியூப் சேனலை பொறுத்தவரை அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்பவர் 311 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சாதனையை முறியடிக்கும் சக்தி ரொனால்டோவிற்கு மட்டும் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். சமூகவலைதளங்கள் அனைத்திலும் கலக்கி வரும் ரொனால்டோ யூடியூபிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.