22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரானது அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி மிக பிரமாண்டமாய் தொடங்கியது. லீக், 2வது சுற்று, கால் இறுதி ஆட்டம், அரையிறுதி ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.
இன்று இறுதிப்போட்டி:
உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணி வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக இருக்கும். இதற்கு முன்னதாக அர்ஜெண்டினா அணி கடந்த 1978 மற்றும் 1986ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதேபோல், பிரான்ஸ் அணி கடந்த 1998 மற்றும் 2018ம் ஆண்டு கோப்பை வென்றுள்ளது.
யாருக்கு கோல்டன் பூட்?
எம்பாப்பே இப்போது FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டிக்கு செல்லும் முன் 5 கோல்கள் அடித்து லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருவேளை இருதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால்? லியோனல் மெஸ்ஸியும் கைலியன் எம்பாப்பேயும் ஒரே அளவான கோல்களில் முடித்துவிட்டால் என்ன செய்வார்கள்? உலக கால்பந்து வரலாற்றில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான கோல்டன் பூட் அப்போது யாருக்கு செல்லும்?
ரூல்ஸ் எம்பாப்பேக்கு சாதகமா?
லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே அல்லது வேறு யாரேனும் இந்த லிஸ்டில் வந்து இணைந்து இவர்களோடு முதல் இடத்தை பகிர்ந்து கொண்டால், குறைந்த எண்ணிக்கையிலான பெனால்டி கோல்களைப் பெற்ற வீரருக்கு கோல்டன் பூட் வழங்கப்படும். இந்த நேரத்தில், லியோனல் மெஸ்ஸி நெதர்லாந்து, குரோஷியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு பெனால்டியை கோலாக மாற்றியுள்ளார், அதே நேரத்தில் எம்பாப்பேவின் அனைத்து கோல்களும் அவுட்பீல்டில் இருந்து வந்தவை. அதனால் கோல்டன் பூட் பந்தயத்தில் எம்பாப்பே முன்னிலையில் இருக்கிறார்.
ஒரு வேளை இருவருமே 5-5 என்று முடித்தாலோ அல்லது இருவருமே இந்த போட்டியில் தலா ஒரு கோல் அடித்து 6-6 என்று முடித்தாலோ, அல்லது அதற்கு மேல் சென்று சமமாக இருக்கும் பட்சத்தில் எம்பாப்பே கோல்டன் பூட் வாங்கி செல்வார். ஒரு வேளை மெஸ்ஸி கோல் அடித்து எம்பாப்பே கோலடிக்கவில்லை என்றால் மெஸ்ஸிக்கு கோல்டன் பூட் வந்து சேரும். இப்போது அந்த பிரச்சனை இல்லை, இருந்தாலும், அனுமானமாக மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே பெனால்டி மற்றும் அவுட்ஃபீல்ட் கோல்களின் எண்ணிக்கையிலும் சமமாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்படி இருந்தால் என்ன செய்வார்கள். அப்போது அசிஸ்ட் கோல் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கிறார்கள். யார் அதிக கோலில் பங்கு கொண்டிருக்கிறார் என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். ஒரு வேளை அந்த நிலை வந்திருந்தால் இன்னும் சிக்கல் தான், அசிஸ்ட் கோல்களில் மெஸ்ஸி எம்பாப்பே இருவருமே 11 என்ற கணக்கில் தற்போதைக்கு சமமாக இருக்கிறார்கள்.
வென்றவர்கள் பட்டியல்:
இந்தநிலையில் 2022 ம் ஆண்டுக்கான கோல்டன் பூட் மெஸ்ஸிக்கா? கைலியன் எம்பாப்பே? என்ற கேள்விக்கு முன்னதாக கடந்த 2018, ஆண்டு வரையிலான ஃபிபா உலகக் கோப்பை தொடர்களில் கோல்டன் பூட் வென்ற வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஆண்டு | வீரர் | நாடு | கோல் எண்ணிக்கை |
2018 | ஹாரி கேன் | இங்கிலாந்து | 6 கோல்கள் |
2014 | ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் | கொலம்பியா | 6 கோல்கள் |
2010 | தாமஸ் முல்லர் | ஜெர்மனி | 5 கோல்கள் |
2006 | மிரோஸ்லாவ் க்ளோஸ் | ஜெர்மனி | 5 கோல்கள் |
2002 | ரொனால்டோ | பிரேசில் | 8 கோல்கள் |
1998 | டேவர் சுக்கர் | குரோஷியா | 6 கோல்கள் |
1994 | ஒலெக் சலென்கோ | ரஷ்யா | 6 கோல்கள் |
1990 | சால்வடோர் ஷிலாசி | இத்தாலி | 6 கோல்கள் |
1986 | கேரி லினேக்கர் | இங்கிலாந்து | 6 கோல்கள் |
1982 | பாலோ ரோஸ்ஸி | இத்தாலி | 6 கோல்கள் |
1978 | மரியோ கெம்பஸ் | அர்ஜென்டினா | 6 கோல்கள் |
1974 | க்ரெஸ்கோர்ஸ் | போலந்து | 7 கோல்கள் |
1970 | ஜெர்ட் முல்லர் | ஜெர்மனி | 10 கோல்கள் |
1966 | யூசிபியோ | போர்ச்சுகல் | 9 கோல்கள் |
1962 | புளோரியன் ஆல்பர்ட் | ஹங்கேரி | 4 கோல்கள் |
1958 | ஜஸ்ட் ஃபோன்டைன் | பிரான்ஸ் | 13 கோல்கள் |
1954 | சாண்டோர் கோசிஸ் | ஹங்கேரி | 11 கோல்கள் |
1950 | அடெமிர் | பிரேசில் | 8 கோல்கள் |
1938 | லியோனிடாஸ் | பிரேசில் | 8 கோல்கள் |
1934 | ஓல்ரிச் நெஜெட்லி | செக்கோஸ்லோவாக்கியா | 5 கோல்கள் |
1930 | கில்லர்மோ ஸ்டேபில் | அர்ஜென்டினா | 8 கோல்கள் |