இந்திய கால்பந்து சங்கத்தை சர்வதேச கால்பந்து சங்கமான ஃபிபா தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இந்திய கால்பந்து சங்கத்தில் சில வெளிநபர்களின் இடையூறு இருப்பதாக கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முடிவு ஃபிபாவின் கவுன்சில் கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது. 


 


இந்திய கால்பந்து சங்கத்திற்கு உரிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் நிர்வாக பொறுப்பை ஏற்று கொள்ளும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்கம் காரணமாக வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த யு-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


 






17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்திய கால்பந்து சங்கம் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு குறைவு. எனினும் இந்தப் போட்டி தொடர்பாக ஃபிபாவின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய ஆடவர் அணி ஏ.எஃப்.சி ஆசிய கோப்பை 2023ஆம் ஆண்டு தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கால்பந்து சங்கத்திற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு பிறகு இந்த பிரச்னை சரி செய்யப்படும் என்று கருதப்படுகிறது. சர்வதேச கால்பந்து சங்கமான ஃபிபா இந்தியாவின் விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 


பயிற்சியாளர் மீது பாலியல் புகார்:


முன்னதாக இந்திய யு-17 மகளிர் இத்தாலியில் இருந்தப் போது இந்திய வீராங்கனை ஒருவரிடம் துணை பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலில் அந்த வீராங்கனையுடன் தங்கியிருந்த மற்றொரு வீராங்கனை பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி இது தொடர்பாக அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் இடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அதில் அவர் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. 


நடந்தது என்ன?


இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மளேனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து துணை பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தற்போது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய யு-17 மகளிர் அணி அடுத்து நார்வேயில் கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது. அந்த அணியுடன் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் செல்லவில்லை. அவர் இந்தியா திரும்பி வருவதாக செய்தி வெளியானது.


கால்பந்து சம்மளேனத்தின் நிலைப்பாடு என்ன?


இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மளேனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய யு-17 மகளிர் அணி ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்திருந்த போது ஒருவர் வீராங்கனையிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த நபரை இந்திய கால்பந்து சம்மளேனம் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவரை இந்தியாவிற்கு திரும்பி வந்து விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளோம். இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து சம்மளேனம் ஒருநாளும் அனுமதிக்காது ” எனத் தெரிவித்திருந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண