செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசியாவில் மூன்றாவது முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. செஸ் உலகில் பல கிராண்ட் மாஸ்டர்களை தந்துள்ள இந்தியா தற்போது முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்த உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் கடந்து வந்த பாதை என்ன? அவரால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
செஸ் போட்டியில் தடம் பதித்த ஆனந்த்:
1969ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தனது தாய் சுசிலாவிடமிருந்து செஸ் விளையாட்டை விஸ்வநாதன் ஆனந்த் கற்றுக் கொண்டார். 6 வயது முதல் செஸ் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார். 1982-83 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் தடம் பதிக்க தொடங்கினார். அப்போது மெட்ராஸ் மாவட்ட செஸ் சங்கம் சார்பாக இந்த இளம் வீரர்களை தேசிய குழு செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அந்த சமயத்தில் செஸ் சங்கத்திற்கு தேவையான நிதி இல்லாமல் இருந்தது.
இந்தச் சூழலில் அப்போதைய சங்க தலைவர் ஆருத்ரா பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் உதவி கேட்டார். அதற்கு எஸ்பிபி நிதியுதவி வழங்கினார். அந்த உதவியுடன் களமிறங்கிய மெட்ராஸ் அணியில் விஸ்வநாதன் ஆனந்த சிறப்பாக விளையாடினார். சிறந்த வீரர் விருதையும் வென்றார். அத்துடன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் அவர் பெற்றார். அதன்பின்னர் 1984ஆம் ஆண்டு முதல் முறையாக தன்னுடைய 15ஆவது வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மேலும் படிக்க:செக்மேட் 6: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவின் பயணம்...!
ஆனந்த் ஏற்படுத்திய தாக்கம்:
1984ஆம் ஆண்டு 15 வயதில் முதல் முறையாக தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார். அதன்பின்னர் 2000, 2007, 2008, 2010, 2012 என 5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். 2000ஆம் ஆண்டு முதல் முறையாக ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியாவில் செஸ் வளர்ச்சிக்கான முக்கியமான காரணமாக அமைந்தது. ஏனென்றால் 2000 ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக தொடங்கினர். அத்துடன் பலர் சிறுவயது முதல் செஸ் விளையாட்டை எடுக்க துண்டுகோளாக ஆனந்த அமைந்தார்.
ஆனந்த பெற்ற விருதுகள்:
1991ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை விஸ்வநாதன் ஆனந்த் வென்றார். இவை தவிர செஸ் ஆஸ்கார் சிறந்த செஸ் வீரர் என்ற பட்டத்தை 1997,1998,2003,2004,2007,2008 என ஆறு முறை வென்று அசத்தினார். இந்த விருதை 5 முறைக்கு மேல் வென்ற ரஷ்யாவை சாராத ஒரே வீரர் ஆனந்த் தான். இந்தியாவில் விளையாட்டு துறையில் மிகவும் உயரிய விருதான கேல் ரத்னா விருதை முதல் முறையாக ஆனந்திற்கு தான் வழங்கப்பட்டது.
52 வயதில் மீண்டும் சர்வதேச செஸ் தரவரிசையில் டாப் 10 இடங்களில் ஆனந்த் உள்ளார். இவர் தற்போது 9வது இடத்தில் உள்ளார். இந்தியாவிலுள்ள செஸ் வீரர் வீராங்கனைகளுக்கு விஸ்வநாதன் ஆனந்த் முக்கியமான முன்னோடியாக உள்ளார். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை விஸ்வநாதன் ஆனந்த் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்