மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி துவங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோ இன்று வெளியாக உள்ளது.
இது குறித்து முதல்வர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், “ 44 ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியிடுகிறார். காத்திருங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, ரூ 100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கிறது. போட்டிகள் மாமல்லபுரத்தில் நடை பெற்றாலும், இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்டுமானங்களையும் புதுபிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பிரதமர் இன்று தொலைப்பேசி மூல தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் வரும் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் தான் குணமடைந்து வருவதாக கூறினார்.
மேலும் செஸ் விளையாட்டுப் போட்டிக்கும் அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், தலைமை செயலாளர் இறையன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் தங்களை வந்து அழைப்பர் என்று கூறி, துவக்க விழாவில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம்.