Federer Last Match: டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ரோஜர் ஃபெடரர். இவர் 24 ஆண்டுகளாக டென்னிஸ் உலகை கலக்கி வந்தார். இந்தச் சூழலில் நேற்று திடீரென்று அவர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இவருடைய ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியை அடைய வைத்திருந்தது. 


மேலும் அவர் தனது ஓய்வு குறித்த அறிவிப்பில், லண்டனில் தொடங்கவுள்ள லவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறவிருப்பதாகவும் அறிவித்திருந்தார். என்னுடைய உடலின் நிலை தற்போது என்னவென்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு 41 வயது ஆகிறது. என்னுடைய ஒட்டுமொத்த 24 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை  1,500 போட்டிகளுக்கு மேலாக விளையாடி இருக்கிறேன். இப்போது என்னுடைய ஓய்வை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.  லண்டனில் தொடங்கவுள்ள லவர் கோப்பை தொடருக்குப்பின் ஓய்வு பெறலாம் என முடிவு செய்து இருக்கிறேன். மேலும், தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவேன், ஆனால் டென்னிஸ் தொடர் மற்றும் கிராண்ட் ஸ்லாம் போடிகளில் பங்கேற்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். 






இவரது ஓய்வு குறித்த அறிவிப்பிற்கு பிறகு உலக சாம்பியனும், ஃபெடரரின் சக போட்டியாளரருமான ரஃபேல் நாடால் தெரிவித்திருந்தது, ''அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பா, போட்டியாளா!,  இந்த நாள் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கும் டென்னிஸ் விளையாட்டிற்கும் சோகமான நாள் இது. உங்களுடன் இத்தனை நாட்கள் விளையாடியதை மிகுந்து மகிழ்ச்சியும், கௌரவுமாகவும் கருதுகிறேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல நல்ல தருணங்கள் நமக்குள்  இருந்தது. இது போன்ற தருணங்கள் நம்மக்குள் மேலும் இருக்கும். ஏனென்றால் நாம் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையே உள்ளன. அது உங்களுக்கு தெரியும். தற்போது நீங்கள் உங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். லண்டனில் விரைவில் சந்திப்போம்'' என குறிப்பிட்டிருந்தார்.


ரஃபேலின் இந்த பதிவுக்கு பிறகு டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் இருவரையும் களத்தில் சந்திக்கும் ஆர்வம் அதிகமானது. ரசிகர்களின் ஆர்வத்தில் இன்னும் கொஞ்சம் ஆச்சர்யத்தை சேர்க்கும் விதமாக லவர் கோப்பைத் தொடரை நடத்தும் நிர்வாகம், வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள டென்னிஸ் போட்டியில் இரு உலக சாம்பியன்களான ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் ஃபெடரர் அகியோர் இணைந்து விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்த்து வந்த நிலையில், இருவரும் இணைந்து விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த லவர் கோப்பை தொடரானது, நாளை அதாவது வெள்ளிக்கிழமை(23/09/2022) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (25/09/2022) முடிவடையவுள்ளது.  இந்த போட்டித் தொடரில் தனது கடைசி போட்டியில் விளையாடவுள்ள ரோஜர் ஃபெடரர் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் எனது கடைசி போட்டியில், ரஃபேலுடன் விளையாடவுள்ளேன் என பதிவிட்டு போட்டி அட்டவணையை பகிந்துள்ளார். 


இதுவரை ஃபெடரரும் ரஃபேலும்...


டென்னிஸ் களத்தில் மிகச் சிறந்த ஆட்டங்களில் எப்போதும் ரோஜர் ஃபெடரர் மற்றும் நடால் ஆகியோருக்கு எதிரான போட்டி இருக்கும். இவர்கள் இருவரும் டென்னிஸ் களத்தில் 40 முறை எதிராக மோதியுள்ளனர். அவற்றில் நடால் 24 முறையும், ஃபெடரர் 16 முறையும் வென்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக இவர்களுக்கு இடையே நடைபெற்ற 8 போட்டிகளில் 7ல் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் கடைசியாக ஃபெடரர் நடால் மோதியிருந்தனர். அதில் ரோஜர் ஃபெடரர் 4 செட்களில் போராடி போட்டியை வென்று இருந்தார். அதன்பின்னர் இருவரும் டென்னிஸ் களத்தில் சந்திக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் போட்டி எப்போதும் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். 


ரோஜர் ஃபெடரர் தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் சுமார் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அத்துடன் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார். அதிக முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீரர் ரோஜர் ஃபெடரர் தான். இவர் 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.