2011 உலகக்கோப்பை தொடரின்போது, காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன. வெறும் 222 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணி 172 ரன்களில் சுருண்டது. அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது.



வங்கதேசத்தின் தாக்கா மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் மிக முக்கியமான நேரமது. 27.5 ஓவர்களில் 121 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டிருந்தது. களத்தில் 35 ரன்களுடன் ஒரு முனையில் டி வில்லியர்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார், அப்போது உள்ளே வந்த டுப்லிஸிஸ் தான் சந்தித்த 2-வது பந்தில் ஒரு வேகமான சிங்கள் எடுக்க டி வில்லியர்ஸை அழைத்தார், அவ்ளோதான் டி வில்லியர்ஸ் அவுட். ரசிகர்களின் கோவம் அனைத்தும் டுப்லிஸிஸ் பக்கம் திரும்பியது. தவறான சிங்கிள் அழைத்து விட்டார் என்று, அதன் பிறகு டுப்லிஸிஸும் 43 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் தென்னாபிரிக்கா அணியின் உலகக்கோப்பை கனவை டுப்லிஸிஸ் தகர்த்துவிட்டார் என எண்ணி அவருக்கும், அவர் மனைவிக்கும் கொலை மிரட்டல்கள் அதிக அளவில் வந்தன என மனம் திறந்துள்ளார் டுப்லிஸிஸ்.


மேலும் சமூக வலைத்தளங்களில் பலர் தங்களை வறுத்தெடுத்தனர், தனிநபர் விமர்சனங்கள் அதிக அளவில் வந்தது, தகாத வார்த்தைகளால் நாங்கள் விமர்சிக்கப்பட்டோம், அதுவே எங்களை நட்பு வட்டத்தையும், பொதுமக்கள் உடனான இணைப்பையும் குறைத்துக்கொள்ளச் செய்தது. விளையாட்டு வீரர்கள் பலர் இந்த நிலைமையை சந்தித்து இருப்பார்கள் என  டுப்லிஸிஸ் 2011-இல் நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார்...