தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளார். 99 வயதான அவர் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது மறைவு இலக்கியவாதிகளுக்கும், வாசகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்த நிலையில், புதுவை லாஸ்பேட்டையில் வசித்து வந்த அவரது உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தின் பொறுப்பு ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது உடல் புதுச்சேரியில் இருந்து அவரது சொந்த ஊரான தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. இடைச்செவல் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செய்யப்படும் என்றும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.