செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அணீஷ் கிரியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். இன்று நள்ளிரவு நடைபெற உள்ள இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-ஆம் நிலை வீரரான சீனாவின் டிங் லிரீனை எதிர்த்து விளையாட உள்ளார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா குறித்தும் சென்னை செஸ் விளையாட்டின் தலைமையிடமாக விளங்குவது குறித்தும் செஸ் பயிற்சியாளர் ரமேஷ் ஏபிபி நாடு-க்கு பேட்டியளித்துள்ளார். அவர் தற்போது பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
சென்னையும் செஸ் விளையாட்டும்:
செஸ் விளையாட்டு போட்டிகளின் தலைமையிடமாக சென்னை மாற காரணம் என்பதற்கு பயிற்சியாளர் ரமேஷ், “இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் மானுவேல் ஆரோன் மற்றும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த ஆகிய இருவரும் சென்னையில் செஸ் போட்டி வளர்ச்சி அடைய ஒரு காரணமாக இருந்தனர். அத்துடன் சென்னை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் ஆகிய இரண்டும் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
இதன்காரணமாக சென்னை, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் செஸ் தொடர்கள் நடத்தப்பட்டன. அது தமிழ்நாட்டிலிருந்து பல வீரர்களை உருவாக்க முக்கிய காரணமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் 2000ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செஸ் பயிற்சி அகாடமி அதிகம் வர தொடங்கியது. இதனால் இளம் வயதில் வீரர் மற்றும் வீராங்கனைகள் செஸ் விளையாட்டை தேர்வு செய்ய முக்கியமான காரணமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.
கிராண்ட் மாஸ்ட்ர் டூ பயிற்சியாளர்:
2003ஆம் ஆண்டு ரமேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஒரு முறை பயிற்சியாளராக இருந்துள்ளார். அதாவது 1998ஆம் ஆண்டு ஈரான் சென்ற இந்திய யு-20 அணிக்கு 22 வயதான ரமேஷ் பயிற்சியாளராக சென்றுள்ளார். அதுவே அவரின் முதல் பயிற்சி அனுபவம். அதன்பின்னர் அவர் 2003ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிறகு வீரராக இருப்பதைவிட பயிற்சியாளராக பல வீரர்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக 2008ஆம் ஆண்டு செஸ் குருகுல் என்ற செஸ் பயிற்சி அகாடமியை தொடங்கியுள்ளார். அவருடைய பயிற்சியில் கார்த்திகேயன், அரவிந்த் சிதம்பரம், வைஷாலி, பிரக்ஞானந்தா போன்ற பல சிறப்பான வீரர் வீராங்கனைகளை உருவாகியுள்ளனர். இது குறித்து அவர், “நான் வீரராக சந்தித்த பல சிக்கல்களை நிறையே வீரர்கள் சந்திப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கு உதவும் வகையில் நான் ஒரு பயிற்சியாளராக மாற விரும்பினேன். தற்போது வரை சுமார் 30 கிராண்ட் மாஸ்டர் வீரர்கள் வரை நான் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அவற்றில் 5 கிராண்ட் மாஸ்டர்கள் என்னுடைய பயிற்சியில் உருவாகியுள்ளனர்” எனக் கூறினார்.
பிரக்ஞானந்தா:
பிரக்ஞானந்தா குறித்து பயிற்சியாளர் ரமேஷ், “என்னுடைய பயிற்சிக்கு 2013ஆம் ஆண்டு பிரக்ஞானந்தா ஒரு சிறுவனாக வந்தார். அவர் எப்போதும் கடினமாக உழைக்க கூடிய வீரர். அவர் தினமும் 6-8 மணி நேரம் வரை பயிற்சி செய்வார். அவருடைய ஒரே இலக்கு உலக சாம்பியன் ஆவது தான். அதற்காக அவர் தீவிரமாக உழைத்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
இந்திய செஸ் விளையாடின் குறைபாடுகள்:
இந்தியாவில் செஸ் விளையாட்டிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக பயிற்சியாளர், “நான் விளையாடும் காலத்தில் நாங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட நல்ல பயிற்சியாளர்கள் இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது நல்ல பயிற்சியாளர்கள் உள்ளனர். எனினும் ஒரு சர்வதேச தரத்தில் வீரர் மற்றும் வீராங்கனைகள் உருவாகிய உடன் அவர்களுக்கு ஏற்ற தொடர்கள் இந்தியாவில் நடப்பதில்லை. அவர்கள் நல்ல தொடரில் பங்கேற்க ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அது சிலருக்கு மிகவும் கடினமாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஆண்டிற்கு 6 முதல் 8 சர்வதேச தரம் வாய்ந்த தொடர்கள் நடந்தால் அது நம் வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பாக அமையும். சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் விளையாட்டிற்கு நல்ல பயனை அளிக்கும். அது மேலும் பல வீரர்கள் உருவாக காரணமாக அமையும்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்