இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளான நேற்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். ரோரி பர்ன்ஸ் 61 ரன்களுக்கு முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹமீது 68 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து டேவிட் மலான் மற்றும் ஜோ ரூட் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டனர். குறிப்பாக இத்தொடர் முழுவதும் நல்ல ஃபார்மில் உள்ள ஜோ ரூட் 57 பந்துகளில் வேகமாக அரைசதம் கடந்தார். அதேபோல் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த டேவிட் மலான் 3 ஆண்டுகளுக்கு டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்தார். டேவிட் மலான் 70 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் ஜோ ரூட் சதம் கடந்து அசத்தினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். மேலும் இந்த ஆண்டு ஜோ ரூட் அடிக்கும் 6-வது சதம் இதுவாகும். 2021-ஆம் ஆண்டு தற்போது வரை ஜோ ரூட் 6 சதம் மற்றும் 2 இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
அத்துடன் ஒரே ஆண்டில் 6 சதங்கள் கடந்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக டெனிஸ் காம்ப்டன் 1947-ஆம் ஆண்டு 6 சதங்களை அடித்திருந்தார். அவருக்கு பின் மைக்கே வான் 2002ஆம் ஆண்டு 6 சதங்கள் அடித்திருந்தார். அவர்கள் அடுத்த வரிசையில் இணைந்துள்ளார். இன்னும் இந்தியாவிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் உள்ளதால், அதில் அவர் ஒரு சதம் அடித்தால் ஒரே ஆண்டில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
கேப்டன் ஜோ ரூட் சதம் கடந்த பிறகு மறுமுனையில் இருந்த பெர்ஸ்டோவ் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் 29 ரன்கள் அடித்திருந்த போது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைவிட 286 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:நான் சொல்லாததை வெச்சு கதை கட்டாதீங்க.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா காட்டம்..!