இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 34* ரன்களுடனும், முகமது ஷமி 56* ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பெர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் முகமது சிராஜ் இடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது தொடக்க வீரர் டாம் சிப்ளியும் ரன் எதுவும் எடுக்காமல் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட் இழந்து தவித்து வருகிறது. பேட்டிங்கில் ஷமி-பும்ரா கலக்கியதை போல் பந்துவீச்சிலும் தற்போது கூட்டணியாக கலக்கி வருகின்றனர்.
முன்னதாக 9-வது விக்கெட்டிற்கு இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய ஜோடி என்ற சாதனையை பும்ரா-ஷமி ஆகியோர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக இதே லார்ட்ஸ் மைதானத்தில் 1982-ஆம் ஆண்டு கபில்தேவ்- மதன்லால் ஜோடி 9ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் சேர்த்திருந்தது. அந்தச் சாதனையை 39 ஆண்டுகளுக்கு பிறகு பும்ரா-ஷமி ஜோடி முறியடித்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது வரை 9ஆவது விக்கெட்டிற்கு 89* ரன்கள் சேர்த்துள்ளனர்.
மேலும் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் 9ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் அடித்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் பும்ரா-ஷமி படைத்துள்ளனர். கடைசியாக 2010-ஆம் ஆண்டு இலங்கையின் காலே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் லக்ஷ்மண்- இஷாந்த் சர்மா ஜோடி 9-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தனர். அதற்கு பின்பு 11 ஆண்டுகள் கழித்து அந்த ஸ்கோரை பும்ரா-ஷமி தாண்டியுள்ளனர்.
இவை தவிர 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து இந்தியாவின் 9,10 மற்றும் 11 ஆகிய இடங்களில் களமிறங்கிய வீரர்கள் 74 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர். ஆனால் இன்றைய போட்டியில் மட்டும் இந்தியாவின் 9ஆவது மற்றும் 10-வது இடத்தில் களமிறங்கிய பும்ரா-ஷமி 77* ரன்கள் அடித்துள்ளனர்.
மேலும் படிக்க: 39 ஆண்டுகால பேட்டிங் ரெக்கார்டை ப்ரேக் செய்து ஷமி-பும்ரா புதிய சாதனை !