இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 30* ரன்களுடனும், முகமது ஷமி 52* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முன்னிலை 259 ரன்களாக அதிகரித்துள்ளது. இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியதன் மூலம் பும்ரா-ஷமி ஒரு முக்கியமான ரெக்கார்டை உடைத்துள்ளது. அத்துடன் மேலும் சில நல்ல விஷயங்களையும் படைத்துள்ளது. 


9ஆவது விக்கெட்டிற்கு இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய ஜோடி என்ற சாதனையை பும்ரா-ஷமி ஆகியோர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக இதே லார்ட்ஸ் மைதானத்தில் 1982ஆம் ஆண்டு கபில்தேவ்- மதன்லால் ஜோடி 9ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் சேர்த்திருந்தது. அந்தச் சாதனையை 39 ஆண்டுகளுக்கு பிறகு பும்ரா-ஷமி ஜோடி முறியடித்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது வரை 9ஆவது விக்கெட்டிற்கு 77* ரன்கள் சேர்த்துள்ளனர். 






மேலும் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் 9ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் அடித்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் பும்ரா-ஷமி படைத்துள்ளனர். கடைசியாக 2010-ஆம் ஆண்டு இலங்கையின் காலே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் லக்‌ஷ்மண்- இஷாந்த் சர்மா ஜோடி 9-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தனர். அதற்கு பின்பு 11 ஆண்டுகள் கழித்து அந்த ஸ்கோரை பும்ரா-ஷமி தாண்டியுள்ளனர். 


இவை தவிர 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து இந்தியாவின் 9,10 மற்றும் 11 ஆகிய இடங்களில் களமிறங்கிய வீரர்கள் 74 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர். ஆனால் இன்றைய போட்டியில் மட்டும் இந்தியாவின் 9ஆவது மற்றும் 10-வது இடத்தில் களமிறங்கிய பும்ரா-ஷமி 77* ரன்கள் அடித்துள்ளனர். 






அதேபோல் இன்றைய போட்டியில் அரைசதம் கடந்துள்ள ஷமி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். அத்துடன் அவர் இதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் அடித்திருந்த 51 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரையும் தாண்டியுள்ளார். அதேபோல் மற்றொரு வீரரான பும்ராவும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை இந்தப் போட்டியில் பதிவு செய்துள்ளார். அவர் தற்போது 30* ரன்களுடன் களத்தில் உள்ளார். 


மேலும் படிக்க:'திருநெல்வேலிக்கே அல்வா வா'- பவுன்சர் போட்டு வெறுப்பேற்றும் இங்கிலாந்து : கடுப்பான பும்ரா