லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்களையும், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 391 ரன்களையும் குவித்தது.


இதையடுத்து, நான்காவது நாளான நேற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 55 ரன்கள் எடுப்பதற்குள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி என்று முக்கிய விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. இதையடுத்து, புஜாராவும்- ரஹானேவும் அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினார்.




மிகவும் நிதானமாக விக்கெட் வீழாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆண்டர்சன், மார்க்வுட், ராபின்சன், சாம் கரன், மொயின் அலி என்று பந்துவீச்சாளர்களை மாறி மாறி பயன்படுத்தினார். ஆனால், இருவரும் அனைவரது பந்துவீச்சுக்களையும் சமாளித்து, அதே சமயத்தில் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களையும் சேர்த்தனர்.


இறுதியில் அணியின் ஸ்கோர் 155ஆக உயர்ந்த போது புஜாரா, மார்க் உட் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 206 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துணை கேப்டன் ரஹானேவும் வெளியேறினார். அவர் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 146 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.




பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். நேற்றை ஆட்டநேர முடிவில் இந்திய அணி 82 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. களத்தில் ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  


ஆட்டத்தின் 5வது நாள் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்தை விட 154 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இன்று இந்திய அணி தனது விக்கெட்டுகளை முழுமையாக இழக்கும் வரை ஆடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு குறைந்தது 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கவே இந்தியா திட்டமிடும். உணவு இடைவேளை வரை இந்திய அணி ஆடினால் மட்டுமே ஆட்டத்தை டிரா செய்ய முடியும். இல்லாவிட்டால் குறைந்த இலக்கை நிர்ணயித்து, இங்கிலாந்து வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் அவர்கள் வெற்றிக்காக அதிரடியாக ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அது இந்திய அணிக்கு சாதகமாவும், பாதகமாகவும் அமையவும் வாய்ப்பு உள்ளது. இதனால், ஆட்டத்தின் 5வது நாளான இன்று விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.