பிரஞ்சு ஓபன் 2021 இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி நோவக் ஜோகோவிச் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற கையோடு, அதை வெல்ல காரணமாக இருந்த தனது ரேக்கெட்டை ஒரு சிறுவனிடம் ஜோகோவிச் வழங்கிய நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.









ரேக்கெட்டை பெற்று கொண்ட சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதும், தனது தாயை கட்டி அணைத்து கொள்வதும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து போட்டியின் பிறகு பேசியுள்ள ஜோகோவிச் "எனக்கு சரியான ஆட்ட யுத்தியை தெரிவித்ததற்காக எனது ரேக்கெட்டை அந்த சிறுவனுக்கு அளித்தேன்" என தெரிவித்துள்ளார்.





 

பிரஞ்சு ஓபன் இறுதி போட்டியில் முதல் இரண்டு செட்களில் பின்னடைவை சந்தித்திருந்தார் ஜோகோவிச். அப்போது இந்த சிறுவன் பார்வையாளர்கள் மேடையில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டே இருந்தான். தொடர்ந்து ஊக்கமளித்து கொண்டே இருந்த சிறுவன், டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுக்கே சில ஆலோசனைகளையும் வழங்கி கொண்டே இருந்தான். 

 

சிறுவன் அளித்த டிப்ஸ் குறித்து தெரிவித்த "உங்கள் சர்வை ஹோல்டு செய்யுங்கள், முதல் பந்தை எளிதான பந்தாக பெறுங்கள், அதன் பிறகு நீங்கள் ஆட்டத்தை காமியுங்கள், தற்போது பேக்ஹேண்டிற்குச் செல்லுங்கள்" இப்படி தொடர்ந்து அந்த சிறுவன் தனக்கு பயிற்சி அளித்ததாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் தரவரிசையில் 5-ஆம் நிலை வீரரான கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர். முதல் 4 செட் முடிவில் 2-2 என்றிருந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இறுதியில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றார். அதன் மூலம் சிட்சிபாஸை வீழ்த்தி தனது 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வென்றார். அத்துடன் 52 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களையும் இரண்டு முறை வென்ற மூன்றாவது ஆடவர் வீரர் என்ற சாதனையை படைத்தார்.


மேலும் பிரஞ்சு ஓபன் வரலாற்றில் நடாலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார். இந்த பெரும் வெற்றிக்கு அந்த சிறுவனும் ஒரு வகையில் காரணம் என்றால் அது மிகையாகாது.