ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு சுவுட்சர்லாந்தில் உள்ள லொசானில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் கலந்து கொண்டார்.


ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா, ஐந்தாவது சுற்றில் குறிப்பிடத்தக்க வகையில் 87.66 மீ தூரம் எறிந்து ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 87.08 மீ தூரம் வீசிய ஐரோப்பிய சாம்பியன் ஜூலியன் வெபர் மற்றும் 86.13 மீ தூரம் வீசிய ஜக்கு வாட்லெஜ் ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்தார். 


நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக்கில் கலந்து கொண்டு தனது முதல் முயற்சியில் தவறு செய்தார். அடுத்து விட்டதை பிடித்த நீரஜ், தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது முயற்சியின் முறையே 83.52 மீ மற்றும் 85.04 மீ எறிந்து கெத்து காட்டினார். தொடர்ந்து தனது 4வது முயற்சியில் மீண்டும் தவறு செய்த நீரஜ், ஐந்தாவது சுற்றில் 87.66 மீ எறிந்து சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆறாவது மற்றும் கடைசி சுற்று முயற்சியில் 84.15 மீ தூரம் எறிந்து முடித்து கொண்டார். 






லொசேன் டயமண்ட் லீக் 2023: ஆண்கள் ஈட்டி எறிதல் முழுவிவரம்




  • 1 – நீரஜ் சோப்ரா (87.66 மீ)




  • 2 – ஜூலியன் வெபர் (87.03 மீ)




  • 3 – ஜக்குப் வட்லெஜ் (86.13 மீ)




  • 4 – ஆலிவர் ஹெலாண்டர் (83.50 மீ)




  • 5 – ஆண்டர்சன் பீட்டர்ஸ் (82.20 மீ)




  • 6 – ஆர்டர் ஃபெல்ஃப்னர் (81.89 மீ)




  • 7 – கேஷோர்ன் வால்காட் (81.85 மீ)




  • 8 – பாட்ரிக்ஸ் கெய்லம்ஸ் (79.45 மீ)




  • 9 – கர்டிஸ் தாம்சன் (74.75 மீ)




முரளி ஸ்ரீசங்கருக்கு 5வது இடம்:


டயமண்ட் லீக்கில் நீளம் தாண்டுதல் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 7.88 மீட்டர் தூரம் தாண்டி 5வது இடத்தை பிடித்தார். சமீபத்தில் புவனேஷ்வரில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப்பில் 8.41 மீட்டர் தாண்டி தனது தனிப்பட்ட சிறந்த தாண்டுதலை பதிவு செய்தார். முன்னதாக, கலிபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 8.29 மீ உயரம் தாண்டி முரளி சங்கர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முரளி சங்கர் நேற்று நடந்த தடகள சுற்றில் 8 மீட்டர் கூட தாண்ட முடியவில்லை. 7.55 மீ என்ற தாண்டுதல் உடன் முதல் சுற்றை தொடங்கிய அவர், அடுத்த இரண்டு சுற்றுகளில் 7.63 மற்றும் 7.88 மீ என உச்சம் பெற்றார்.


லொசேன் டயமண்ட் லீக் 2023: ஆண்கள் நீளம் தாண்டுதல் முழுவிவரம்




  • 1 – லாகுவான் நைர்ன் (8.11 மீ)




  • 2 – மில்டியாடிஸ் டென்டோக்லோ (8.07 மீ)




  • 3 – யுகி ஹஷியோகா (7.98 மீ)




  • 4 – சைமன் எஹாம்மர் (7.97 மீ)




  • 5 – முரளி ஸ்ரீசங்கர் (7.88 மீ)




  • 6 – பிலிப் பிராவ்டிகா (7.83 மீ)




  • 7 – செஸ்வில் ஜான்சன் (7.78 மீ)




  • 8 – தோபியாஸ் மாண்ட்லர் (7.75 மீ)




  • 9 – மாட்டியா ஃபுர்லானி (7.73 மீ)