36 ஆண்டு காலமாக தமிழக காவல்துறையில் பணியாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு இன்றுடன்  ஓய்வு பெற்றார்.இந்த நிலையில் தமிழக காவல் துறை சார்பில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அப்போது குதிரைப்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, பெண்கள் கமேன்டோ அணி, தமிழ்நாடு காவல் ஆண்கள் அணி, தமிழ்நாடு சிறப்பு அதிரடி படை, கடலோர காவல் படை, கொடி அணிவக்குப்பு, காவல் இசை வாத்திய குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


"காவல்துறையை முன்னேற செய்ய வேண்டும்”


அப்போது மேடையில் பேசிய அவர் "கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் ஜாதி கலவரங்கள் இல்லை, ரயில் கலவரங்கள் இல்லை, துப்பாக்கி சூடுகள் இல்லை. போதை பொருள் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தப்பட்டது. வரலாற்றில் முதன் முறையாக கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையங்களில் முதல்முறையாக வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடற்படையில் செல்வதற்கான பயிற்சிகள் மேலும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அணுகுமுறை பயிற்சியும் வழங்கப்பட்டது.


பெண் காவல்துறையின் வருகை 7 மணியிலிருந்து எட்டு மணி ஆக அறிவிக்கப்பட்டது. 155 காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை பணி என்பது எளிமையாக இருக்காது. இந்த பணியில் பல சிக்கலான சவால்களை சந்திப்பீர்கள். இந்த சவால்கள் உங்களை வேதனைக்கும் சோதனைக்கும் உட்படுத்தும். தைரியமாக எதிர் கொண்டு காவல்துறையை முன்னேற செய்ய வேண்டும்.


”எனது தாயாருக்கு சல்யூட்"


தொடர்ந்து பேசிய அவர், "வடநாட்டு தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என வதந்தி பரப்பும் போது தமிழ்நாட்டுக் காவல்துறையினர் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டார்கள்.இரண்டு ஆண்டுகளில் காவல் நிலைய அளவிலும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நல்ல தலைவர்களை உருவாக்கி உள்ளேன். அவர்கள் தமிழக காவல்துறையை நல்ல கட்டத்திற்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனது கடமையை நன்றாக முடித்துவிட்டேன் நன்றி உணர்வு மற்றும் மேலோங்கிறது. என்னுடைய மூத்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.


பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் எனது உயிரை காப்பாற்றி உள்ளார்கள் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பணியிலும் பணியாற்றியுள்ளேன் அதில் என்னுடைய பணியாற்றி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனைவி சோபியா எனக்கு உறுதுணையாக இருப்பவர்.


எனது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை 93 வயது நிரம்பிய என்னுடைய தாயார் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார் இந்த நேரத்தில் அவருக்கு ஒரு சல்யூட் செய்கிறேன்” என்று சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.