கடந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கா விளையாடி சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். தோனி, கோலி, டி வில்லியர்ஸ் ஆகிய பெரிய கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் பிரபலமடைந்தார். அந்தத் தொடரில் 71 யார்க்கர்களை வீசி  ‘யார்க்கர்’ நடராஜன் என்று அழைக்கப்பட்டார். மேலும், சகவீரர்களால் ‘நட்டு’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார்.




 


ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். நெர் பவுலராக சென்ற நடராஜன், அந்தத் தொடரில் சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒரே சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச ஃபார்மட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.




இந்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தனக்கு கொடுத்த ஆலோசனை குறித்து நடராஜன் மனம் திறந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தோனி என்னிடம் பேசும் எனது ஃபிட்னஸ் குறித்து பேசினார். அவரை போன்ற ஆளுமையுடன் பேசுவதே பெரிய விஷயம் என்று எண்ணினேன். என்னை ஊக்கப்படுத்தினார். விளையாடுவதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்கள் தான் நம்மை மேம்படுத்தும் என்று கூறிய அவர், பவுலிங்கில் ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் மற்றும் பந்துகளில் பல வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்றார். அது எனக்கு உதவிகரமாக இருக்கிறது” என்று கூறினார்.