ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 11 பவுண்டரிகள் உதவியுடன் 101* ரன்கள் குவித்தார். இது ஐபிஎல் தொடரில் வரலாற்றில் தேவ்தத் படிக்கல் முதல் சதமாகும். இந்நிலையில் யார் இந்த படிக்கல்? எவ்வாறு ஐபிஎல் தொடருக்கு தேர்வானார்?
கேரளாவில் உள்ள இடப்பல்லியை பிறந்தவர் தேவ்தத் படிக்கல். இவரது சிறு வயதில் இவருடைய பெற்றோர் ஹைதராபாத்தில் உள்ள ஆர் கே புரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கே தேவ்தத்தின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் கடினமான முடிவெடுத்து பெங்களூர் வந்தனர்.
தனது 11 வயது முதல் தீவிரமாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட தொடங்கினார். பின்னர் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் பெல்லாரி அணிக்காக அதிரடி காட்டியதன் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அதன்பின்பு கர்நாடக யு-19 அணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சற்று தடுமாறினார். எனினும் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கூச் பிஹார் தொடரில் 829 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்காரணமாக இவருக்கு கர்நாடக அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இலங்கை சென்ற இந்திய யு-19 அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் விளைவாக 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தேர்வானார். எனினும் அந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு யுஏஇயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 5 போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் பல ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். விராட் கோலியுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்தினார்.
அந்தத் தொடரில் 15 போட்டிகளில் 473 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடாமல் ஏமாற்றினார். இந்தச் சூழலில் நேற்று களமிறங்கிய நான்காவது போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தேவ்தத் படிக்கல் குறித்து அவருடைய தாய் அம்பிலி படிக்கல்,"எங்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை பையனாக இருந்தால், அவனை கிரிக்கெட் வீரராக உருவாக்குவதாக முடிவு செய்திருந்தோம். அதற்கு ஏற்ற மாதிரி படிக்கல் ஒரு கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது" என Cricbus தளத்தில் கூறியிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.