விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஜோகோவிச், ஆட்டத்தின் இடையே உணர்ச்சிவசப்பட்டு தனது ராக்கெட்டை உடைத்த சம்பவம் வைரலானது.
விம்பிள்டன் 2023 இறுதிப் போட்டி
விம்பிள்டன் 2023 இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள 20 வயதான கார்லோஸ் அல்கராஸ்-க்கும், சீனியர் வீரர் ஜோகோவிச்சுக்கும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதிவரை சென்ற இந்த போட்டியில் இரு வீரர்களும் சம பலத்தை வெளிப்படுத்த ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இறுதி செட்டில் தனது கையை ஓங்கிய கார்லோஸ் அல்கராஸ் போராடி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஐந்தாவது செட்டில் ஜோகோவிச் எவ்வளவு முயன்றும், அதற்கு ஒரு படி மேலே சென்று அல்கராஸ் சிந்தித்து அவரை பல முறை வீழ்த்தினார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட ஜோகோவிச் தனது ராக்கெட்டை உடைத்த சம்பவம் வைரலானது.
ராக்கெட்டை உடைத்த ஜோகோவிச்
ஐந்தாவது செட்டின் இடையே சைடு மாறும் இடைவெளியில் தனது ராக்கெட்டை நெட் போஸ்டில் வேகமாக அடிக்க, ராக்கெட் தாறுமாறாக நெளிந்து கீழே விழுந்தது. அதனை எடுத்து சென்று ஓரமாக வைத்து வேறு ராக்கெட் எடுத்தார். அதன் பிறகு ராக்கெட் அடித்த நெட் போஸ்டை ஜூம் செய்து காண்பித்தது கேமரா. அந்த இடத்தில் சிறு கொடு இருந்தது. இந்த சம்பவம் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நடுவருக்கு முன்னால் நடந்தது. பின்னர் கூட்டம் அல்கராஸை உற்சாகப்படுத்தத் தொடங்கியபோது, அது மூத்த வீரரை விளிம்பில் தள்ளுவது போல் தோன்றியது.
இறுக்கமாக சென்ற போட்டி
விம்பிள்டன் இறுதிப்போட்டி, பெரும்பாலும் தரவரிசையில் முதல் இரண்டு வீரர்களுக்கு இடையே இறுக்கமான போட்டியாக அமையும். அதே போலவே ஆட்டம் முதல் செட்டில் ஜோகோவிச் பக்கமும், அடுத்த செட் கடும் போராட்டமும், மூன்றாவது செட் ஆல்கராஸ் பக்கமும் இருந்தது. பின்னர் 4 வது சேட்டை வென்ற ஜோகோவிச், கடைசி செட்டில் போராடி தோற்றார். விம்பிள்டன் வரலாற்றில், ரோஜர் ஃபெடரரின் 8 பட்டங்களின் எண்ணிக்கையை சமன் செய்ய இன்னும் ஒரே ஒரு விம்பிள்டன் பட்டம் ஜோகோவிச்சுக்கு தேவை. நெருங்கி வந்த அவர் அதனை வெல்ல முடியாமல் போகுமோ என்ற அழுத்தம் தான் அவரை வெடித்தெழ செய்துள்ளது.
8வது விம்பிள்டன் கனவு தகர்ந்தது
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் கடைசியாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர், 2013 ஆம் ஆண்டு ஆண்டி முர்ரேவுக்கு எதிராக தோல்வியடைந்தார். அதன் பின்னும் முன்னும் என 7 விம்பிள்டன் வென்ற வீரரை தோற்கடிக்க அல்கராஸ் பல்வேறு வழிகளை கண்டறிந்தார். ஐந்தாவது செட்டின் போது, கூட்டம் அல்கராஸிற்கு ஆதரவு தர திரும்பியது, அல்கராஸின் ஒவ்வொரு வெற்றியையும் உற்சாகப்படுத்தினர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டத்தில் 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற கணக்கில் அல்கராஸ் வெற்றி பெற்று, £23,50,000 பரிசுத் தொகையைப் வென்றார்.