பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 


திருமாவளவனிடம் புகார் 


உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ள பணிபுரியும் கிருபா முனுசாமி என்பவர், தற்போது  மத்திய அரசின் உதவியுடன் லண்டனில் சட்டத்துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம்  விக்ரமன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “விக்ரமன் தன்னை காதலிப்பதாக கூறியதால், நானும் சம்மதித்தேன். நாங்கள் பழகிய இந்த 3 ஆண்டுக்காலத்தில் என்னை பலமுறை அவமானப்படுத்தியுள்ளார். 


என்னை மனைவியாக உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார். என்னுடைய கிரெடிட் கார்டில் ரூ.80 ஆயிரம் செலவு செய்தது பற்றி கேட்டபோது சாதி ரீதியாக இழிவுப்படுத்தினார். தலித் பெண்ணான என்னை வாழ்க்கையை கொச்சைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளார். விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். 


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.


மீண்டும் விக்ரமன் மீது குற்றச்சாட்டு 


அதில் விக்ரமுடனான உரையாடல் என ஸ்க்ரீன்ஷாட்களும் இடம்பெற்றுள்ளது. ட்விட்டரில் கிருபா முனுசாமி வெளியிட்டுள்ள பதிவில், ‘2013 ஆம் ஆண்டில் நான் விருந்தினராக பங்கேற்ற நிகழ்ச்சியில் விக்ரமனும் பங்கேற்றார். அதன்பிறகு ஆகஸ்ட் 2020ல் நான் லண்டன் சென்றபோது தானாக முன்வந்து விமான நிலையத்தில் வழியனுப்பினார். 


பின்னர் 2 மாதங்கள் கழித்து அக்டோபர் மாதம் என்னிடம் பேச தொடங்கினார். 2 நாட்கள் கழித்து விசிக கட்சியில் தன்னை சேர நிர்வாகிகள் அழைத்ததாக சொன்னார். அவருடைய அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அவரே தான் சென்று கட்சியில் இணைந்தார் என்பது தெரிய வந்தது. 


அவர்  என்னிடம் செய்யும் அரசியல், பண மோசடி தொடர்பாக நான் கேள்வி கேட்டேன்.  இதனால் விக்ரமன் என்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். நான் அவரை விட்டு விலகும் நேரத்தில் எல்லாம், என்னிடம் கெஞ்சுவது, இனி சரியாக நடப்பேன் என கூறுவார். ஆனால் அவரின் குணம் தொடர்ந்து மாறாமல் இருந்தது. 2 வருடமாக அவருடன் உறவில் இருந்த நான் விக்ரமனுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்தினேன். 


அவர் திருப்பி தருவதாக கூறிய பணத்தை கேட்ட போது என்னை பிளாக் செய்தார். 3 மாத முயற்சிக்குப் பின் பிக்பாஸ் செல்வதற்கு முன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின் நாங்கள் ஒன்றாக இருந்தோம்.பிக்பாஸ் முடிந்து எங்கள் காதல் தொடர்ந்தது. மேலும் தன்னுடைய மேனேஜர் என சொல்லும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தார். என்னை ஏமாற்றினார் என கண்டுபிடித்தேன். நான் கான்பிரன்ஸ் கால் செய்து நேரடியாக கேட்டபோது உண்மையை ஒப்புக் கொண்டார். 


அந்த பெண்ணுடன் விக்ரமன் காதலில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் தன்னுடைய முன்னாள் காதலிகள் என கூறிய 15க்கும் மேற்பட்டோரிடம் பேசினேன். அவர்களில் பலருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் மீது புகாரளிக்க போவதாக கூற, தனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளதாக விக்ரமன் என்னை மிரட்டினார். 


தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனிடம் 20 பக்க புகார் கடிதம் அனுப்பினேன். அவர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க சொன்னார். இதில் சில ஆதாரங்களை நான் சமர்பித்தேன். அந்த குழு சமர்பித்ததாக அறிக்கையின் நகல் எனக்கு கிடைக்கவில்லை’ என கிருபா முனுசாமி புகார்களை விக்ரமன் மீது அடுக்கியுள்ளார்.