ஐ.பி.எல். சீசனின் 13-வது ஆட்டம் இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 6 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இளம் கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிகின்றனர்.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், டி காக்கும் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் டி காக் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய சூர்யகுமார் யாதவும், ரோகித் சர்மாவும் இணைந்து துரிதமாக ரன்களை சேகரித்தனர்.
15 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்களை சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை குவித்த நிலையில் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் களமிறங்கிய அதிரடி மன்னன் ஹர்திக் பாண்ட்யா சந்தித்த முதல் பந்திலே அமித் மிஸ்ராவின் பந்துவீச்சில் டக் அவுட்டாகினார். அடுத்து களமிறங்கிய குருணால் பாண்ட்யாவும் 1 ரன்களுக்கும், பொல்லார்ட் 2 ரன்களுக்கும் வெளியேறினர்.
இதையடுத்து கடந்த ஆட்டத்தைப் போல இந்த ஆட்டத்திலும் மந்தமான பேட்டிங்கை தொடர்ந்த இஷான் கிஷான் 28 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக ஆடிய ஜெயந்த் யாதவ் 22 ரன்களை சேர்த்தார். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் விளையாடியதை பார்த்தபோது மும்பை அணி 180 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே மும்பை அணி சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.