நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் களமிறங்கி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். 


குறிப்பாக பந்துவீச்சில் முக்கியமான பட்லர் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் ஃபில்டிங்கில் நான்கு கேட்சுகளைப் பிடித்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு சென்னை அணியின் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஜடேஜா குறித்தும் சென்னை அணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். 




இது தொடர்பாக அவர், “சென்னை அணி முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக மீண்டு வந்துள்ளது. குறிப்பாக நேற்றைய போட்டியில் சென்னை அணி வலுவான ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இப்போட்டியில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். பந்துவீச்சு மற்றும் ஃபில்டிங் ஆகிய இரண்டிலும் அசத்தினார். எனவே என்னைப் பொறுத்தவரை இனி சென்னை அணி நிர்வாகம் ஜடேஜாவை முன்னிலைப்படுத்தி அணியை கட்டமைக்கவேண்டும். ஏனென்றால், தோனி இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார். ஆகவே தோனியை தாண்டி சென்னை அணி தற்போது யோசிக்க வேண்டும். ஜடேஜா எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட கூடிய திறமைபெற்றவர். அத்துடன் ஃபில்டிங் மற்றும் பந்துவீச்சிலும் அசத்தும் வலிமை பெற்றவர். ஆகவே இளம் வீரர்களுக்கு இவர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார். தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா தான் இருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 




சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திடீரென ஓய்வை அறிவித்தார். இந்தச் சூழலில் கடந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அதனை தோனி மறுத்தார். இதனைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் முடிவில் தோனி ஓய்வு பெறுவார் என்ற கருத்து எழத் தொடங்கியது. இதற்கு சென்னை அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பதிலளித்தார். அதாவது தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணியை வழிநடத்துவார் என்று தெரிவித்தார். இதன்மூலம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி பங்கேற்பார் என்பது உறுதியாகி உள்ளது. இந்தச் சூழலில் மைக்கேல் வானின் கருத்து சென்னை அணியின் ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.