டேவிஸ் கோப்பையில் இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது.


யுகி பாம்ப்ரி மற்றும் சாகேத் மைனேனியின் அசத்தல் வெற்றி, இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது அண்டை நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலக குரூப் 1ல் இடம்பிடித்துள்ளது.






வரலாறு படைத்த யுகி மற்றும் சாகேத்:


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யுகி பாம்ப்ரி மற்றும் சாகேத் மைனேனி, பாகிஸ்தானின் ஜோடியான முஸம்மில் மோர்டாசா மற்றும் அகில் கான் ஜோடியை 6-2, 7-6 (5) என்ற கணக்கில் தோற்கடித்து பாகிஸ்தானின் மீது இந்தியாவின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். இந்தப் போட்டிக்காக, இரட்டையர் ஆட்டத்தில் பர்கத் உல்லாவுக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த அகீல் கானை களமிறக்கி பாகிஸ்தான் இந்திய அணிக்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தது. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் இந்த தந்திரமும் பலனளிக்கவில்லை. யுகி பாம்ப்ரி மற்றும் சாகேத் மைனேனி ஜோடி பாகிஸ்தான் அணியை பந்தாட, பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணிலேயே மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. போட்டி தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடியான யுகி பாம்ப்ரி மற்றும் சாகேத் ஜோடி, பாகிஸ்தான் ஜோடிக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்காமல், ஆட்டத்தில் முன்னிலையை தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது.


அறிமுக போட்டியிலேயே அசத்திய பூனாச்சா:


யூகி பாம்ப்ரி, சாகேத் ஜோடியின் இரட்டையர் ஆட்டத்திற்குப் பிறகு, ஒற்றையர் ஆட்டமும் இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக இளம் வீராங்கனை நிக்கி பூனாச்சா களமிறங்கினார். இது நிக்கியின் முதல் அறிமுக போட்டியாகும். நிக்கி தனது அறிமுக ஆட்டத்தில் பாகிஸ்தானை வேட்டையாடி முகமது சோயப்பை 6-3, 6-4 என்ற கணக்கில் எளிதில் தோற்கடித்தார்.  






இந்திய அணிக்கு பலத்த பாதுகாப்பு:


இந்திய டென்னிஸ் அணிக்கு பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போட்டியின்போதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு பல பாதுகாப்பு ஏஜென்சிகளை நியமித்து இந்திய அணிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.