காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் இந்தாண்டு 8ஆம் தேதி வரை பிர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 61 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. பாகிஸ்தான் அணி இரண்டு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்று இருந்தது. காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சென்ற இரண்டு பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் குத்துச்சண்டை சம்மளேனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற பாகிஸ்தானின் சுலேமான் பலோச் மற்றும் நசிருல்லா கான் ஆகிய இருவரும் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பும் பாகிஸ்தான் அணியின் வீரர் வீராங்கனை குழுவுடன் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரின் பாஸ்போர்ட். விசா உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தான் குத்துச்சண்டை அதிகாரிகளுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளில் பாகிஸ்தான் அணி குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லவில்லை. இந்தச் சூழலில் இவர்கள் இருவரும் நாட்டிற்கு திரும்பாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று பாகிஸ்தான் வீரர் ஒருவர் காணாமல் போவது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நாட்டின் நீச்சல் வீரர் ஃபைசான் அக்பர் நீச்சல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஹங்கேரி சென்று இருந்தார்.
ஆனால் அவர் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் தன்னுடைய பாகிஸ்தான் பாஸ்போர்ட் உடன் தப்பி இருந்தார். அவர் பற்றியை தகவல் இன்னும் தெரியவில்லை. அவரை கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்