அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டீகோ மாரடோனா கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மாரடோனா மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் க்யூபாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர். இது கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


அர்ஜெண்டீனா நாட்டில் உள்ள புயனெஸ் ஏர்ஸ் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் க்யூபாவைச் சேர்ந்த மேவிஸ் எல்வரேஸ் என்ற பெண் மாரடோனா மீது புகார் அளித்திருக்கிறார். அதில், தன்னுடைய 16வது வயதில் மாரடோனாவுடன் பழகியதாகவும், அப்போது அவர் கட்டாய பாலுறவுக்கு வலியுறுத்தியதாகவும், போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். 


1986-ம் ஆண்டு அர்ஜெண்டீனா அணி கால்பந்து உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமானவர் மாரடோனா. அதனை அடுத்து போதைப் பொருளுக்கு அடிமை ஆகியிருந்த மாரடோனா, 2001-ம் ஆண்டு போதைப்பொருள் மீட்பு சிகிச்சைக்காக க்யூபா சென்றிருக்கிறார். அப்போது, மாரடோனாவுக்கு 41 வயது, மேவிஸ் எல்வரேஸுக்கு 16 வயது. அப்போது மாரடோனாவுடன் மேவிஸூக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் மாரடோனா நன்றாக பழகியதாகவும், நாளடைவில் தன்னை சித்திரவதை படுத்தியதாகவும் மேவீஸ் குற்றம் சாட்டியுள்ளார். 



அவர் போதைப் பொருளுக்கு அடிமையானது மட்டுமல்லாது தன்னையும் கட்டாயப்படுத்தி போதைப்பொருள் பயன்படுத்த வைத்ததாகவும், கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும், மார்பகங்களை பெரிதுபடுத்தும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென சித்திரவதை செய்தததாகவும் மேவீஸ் தெரிவித்திருக்கிறார். 


இது தொடர்பாக நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மேவீஸ், இனி இந்த சம்பவம் பற்றி பேசப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மாரடோனா மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அவரது குடும்பத்தினர், மேவீஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.


கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மாரடோனாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின்போது இது போன்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்திருப்பது மாரடோனா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இறந்தும் செக்ஸ் புகார் குற்றச்சாட்டில் மாரடோனாவின் பெயர் அடிப்படுவது கால்பந்து வட்டாரத்தில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எனினும், இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்த பிறகே இச்சம்பவத்தை ஒட்டிய உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண