ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஸ்டார் அணியாக விளங்குவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். அதற்கு காரணம் இந்திய அணியின் பாகுபலியாக விளங்கிய தோனி, சென்னை அணிக்கு தலைமை தாங்கியதுதான். களமிறங்கிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற சென்னை அணியின் சாதனை கடந்த சீசனில் தவிடு பொடியானது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். 13வது சீசனில் சென்னை அணி 7வது இடத்தை மட்டுமே பிடித்தது.

இதனால் இழந்த ஐ.பி.எல். சாம்ராஜ்யத்தை மீட்கும் உத்வேகத்துடன் இம்முறை சென்னை அணி களமிறங்கி உள்ளது. கடந்த சீசனில் `சின்ன தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா விளையாடவில்லை. ஆனால், இம்முறை தோனிக்கு பக்கப்பலமாக ரெய்னா களமிறங்குவது சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

கடந்த முறை சிக்சர் அடிப்பது போல் பாவ்லா காட்டி, மட்டையை போட்டு எதிரணிக்கு வெற்றியை தேடி தந்த கேதர் ஜாதவ், இம்முறை அணியிலிருந்து நீக்கப்பட்டது சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், அணியில் எதுக்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்த முரளி விஜய், பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளதும் சென்னை அணி சரியான பாதையில் செல்கிறது என்பதை காட்டுகிறது.

கடந்த சீசன் இறுதியில் தொடர்ந்து 3 அரைசதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரண், அதிரடி பார்மில் உள்ள அனுபவ வீரர் ராபின் உத்தப்பா, தென்னாப்பிரிக்க வீரர் டுபிளசிஸ் வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் சென்னை அணியின் பலமாக பார்க்கப்படுகின்றனர்.

தோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா ஆகிய ஜாம்பவான் வீரர்கள் , சமீப காலமாக  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தது சென்னை அணியின் மிகப் பெரிய பலவீனமாக கருதப்படுகிறது.

மேலும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் சென்னை அணி, அங்கு கில்லி போல் செயல்படும். ஆனால் சென்னை அணி தனது கோட்டையான சேப்பாக்கத்தில் விளையாடமால் மும்பை, டெல்லி போன்ற ஊர்களில் விளையாடுகிறது. இதுவும் சென்னை அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. இருப்பினும் சீனியர் வீரர்கள் பார்முக்கு திரும்பினால் சென்னை அணி, பழைய கபாலியாக ஐ.பி.எல். போட்டியில் வலம் வரும். மொத்தத்தில் அடிப்பட்ட சிங்கமாக உள்ள சென்னை அணி, இம்முறை பாயுமா, இல்லை பதுங்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்..