ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் டூபிளசிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன்பின்னர் வந்த ரெய்னா(24), ராயுடு(14) என்ற ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா தொடக்கம் முதல் அதிரடி காட்டினார். குறிப்பாக சென்னை அணியின் 20-வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சை வெளுத்து கட்டினார். ஒரே ஓவரில் 5 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 37 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 191 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கோலி 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த மேக்ஸ்வெல்(22) ஏபிடிவில்லியர்ஸ்(4) என்ற சொற்ப ரன்களுடன் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் சரியாக விளையாடாமல் இருந்ததால், பெங்களூரு அணி திணறி வந்தது. 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 34 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அடையும் முதல் தோல்வி இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றிப் பெற்றுள்ளது. பெங்களூரு அணியும் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் நான்கு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.