பியூஷ் சாவ்லாவின் தந்தை பிரமோத்குமார் சாவ்லா காலமானார். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் அதிலிருந்து விடுபட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகான உடல்நல சிக்கல்கள் பிரமோத்குமாருக்கு ஏற்பட்டதே அவர் உயிரிழந்ததற்கான காரணம் என பியுஷ் சாவ்லா குறிப்பிட்டுள்ளார்.






தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தனது தந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


ஒன்றல்ல இரண்டல்ல, தோனியின் பெற்றோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அஸ்வின் குடும்பத்தில் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டது, இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி தனது தாய் மற்றும் சகோதரி இருவரையும் பறிகொடுத்துள்ளார், இளம் வீரர் சேத்தன் சக்காரியாவின் தந்தை நோய்க்கு பலியாகியுள்ளார், இந்த நிலையில் பியூஷ் சாவ்லாவின் தந்தையும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் தற்போது உயிரிழந்துள்ளார். இவ்வாறாக பலரின் உயிரிழப்பு செய்திகள் கிரிக்கெட் உலகில் தொடர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


சமூக வலைதளங்களில் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் பியுஷ் சாவ்லாவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.






 கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில், ”பியூஷ் சாவ்லா தந்தை இறந்த செய்தி இதயத்தை நொறுக்குகிறது. அவருக்கும், அவரின் குடும்பத்திற்கும் இறைவன் இதை தாங்கிக்கொள்ளும் சக்தியை தர வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 






அதே போல் சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், ஹர்ஷா போக்லே என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.