சமீப காலமாக 16 வயது டீன் ஏஜ் முதல் 35 வயது இளைஞர்கள் வரை திடீர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தொடர் கதையாகிவிட்டது. அதிலும், குறிப்பாக, 18 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த மாரடைப்பால் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு என்ன காரணம் என தெரியாததால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.


கடந்த சில ஆண்டுகளாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது, நடைபயிற்சியின்போது இளைஞர்கள் சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தருகிறது. அந்த வடு மாற சில நாட்கள் ஆவதற்கு முன்பே, அடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நொய்டாவில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.


இங்கு கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் விகாஸ் நேகி. இவருக்கு 34 வயதுதான் ஆகிறது. இவர் டெல்லியில் பொறியாளராக பணியாற்றி வந்ததுள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாக கூறப்பட்டாலும், அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நொய்டாவின் செக்டார் 135ல் கட்டப்பட்ட புதிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டி மேவரிக்-11 மற்றும் பிளேசிங் புல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இங்கு போட்டியின் முதல் இன்னிங்சிலேயே இப்படியான சோகமான விபத்து நடந்ததுதான் பேரிழப்பு.


ரன்களுக்கு ஓடியபோது திடீரென மாரடைப்பு: 


மேவரிக்-11 இன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் பேட்ஸ்மேன்களான உமேஷ் குமாரும் விகாஸ் நேகியும் களத்தில் இருந்தனர். இங்கு 14வது ஓவரின் ஐந்தாவது பந்தில் உமேஷ் ஷாட் அடிக்க மறுமுனையில் நின்ற விகாஸ் ரன் எடுக்க ஓடினார். பந்து எல்லையை தொட்டு பவுண்டரியாக மாற, உமேஷுடன் கைகுலுக்கி விட்டு விகாஸ் மறுமுனையில் உள்ள ஸ்ட்ரைக்கு திரும்பத் தொடங்கினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்திலேயே ஆடுகளத்தில் மயங்கி விழுந்தார். அவர் விழுவதைப் பார்த்த எதிரணியின் விக்கெட் கீப்பர் முதலில் ஓடினார். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களும் அவரை நோக்கி ஓடினர். சில நிமிடங்களில் அனைத்து வீரர்களும் விகாஸைச் சுற்றி திரண்டு முதலுதவி செய்ய தொடங்கினர்.






ஆடுகளத்திலேயே கொடுக்கப்பட்ட CPR:


விகாஸ் மைதானத்தின் நடுவே விழுந்ததை தொடர்ந்து, அவருக்கு உடனடியாக CPR கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


விகாஸ் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தற்போது டெல்லி ரோகினியில் வசித்து வந்தார். இவர் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.


மாரடைப்பு ஏன்..?


இதயத்தின் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம்  தடைபடுவதே மாரடைப்பு எனப்படுகிறது. மாரடைப்பு (MI) ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு ஒரு பிரச்சினையாக கருதப்பட்டது. 40 வயதிற்குட்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு என்பது மிகவும் அரிதானதாக இருந்தது.  ஆனால் இப்போது ஒவ்வொரு ஐந்து மாரடைப்பு நோயாளிகளில் ஒருவர் 40 வயதிற்குட்பட்டவர் என கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானது என கூறப்படுகிறது.


2000 மற்றும் 2016 க்கு இடையில், 20-கள் அல்லது 30-களின் ஆரம்பத்தில், இளம் வயதினருக்கு மாரடைப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 2% அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கரோனரி இதய நோய் (CHD) மற்ற சிக்கல்களுடன் சேர்ந்து, மாரடைப்பு (MI) ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.  இந்த நோய் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.