இந்தியா - ஜிம்பாப்வே:


ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இச்சூழலில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இரு அணிகளும் மோதின.


ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக அருமையான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.


அதிரடியான இவர்களது பார்டனர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 67 ரன்கள் எடுத்தது. அப்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஜஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகள் வரை களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக் ஸர்கள் உட்பட மொத்தம் 36 ரன்கள் விளாசினார்.இதனிடையே மறுபுறம் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பதிவு செய்தார்.அப்போது அபிஷேக் ஷர்மா 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 49 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 66 ரன்களை குவித்தார்.


இந்திய அணி வெற்றி:


அடுத்ததாக வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளைடாடினார்கள். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. தற்போது 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதேவேரே மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினார்கள்.


இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்ட அடுத்தாக வந்த பிரையன் பென்னட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி திணறிய போது டியான் மியர்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடினார். இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய சிக்கந்தர் ராசா 15 ரன்களில் நடையைக்கட்டினார். அதிகபட்சமாக கடைசி வரை களத்தில் நின்ற டியான் மியர்ஸ் 65 ரன்களும், கிளைவ் மடாண்டே 37 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.