இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை வகித்து வந்த ராகுல் டிராவிட் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கம்பீர் முன் உள்ள சவால்கள்?


ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுத் தந்த கவுதம் கம்பீர் ஆலோசகராக பொறுப்பேற்று கொல்கத்தா அணிக்காக மீண்டும் ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுத் தந்தார். இந்த சூழலில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.


களத்தில் இறங்கினால் வெற்றி மட்டுமே இலக்கு என்று செயல்படும் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் முன் ஏராளமான சவால்கள் உள்ளது. முதல் சவாலே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஜாம்பவான் வீரர்களான கோலி, ரோகித் ஓய்வு பெற்றிருப்பதால் அவர்களது இடத்தை நிரப்புவதற்கு தயாரான வீரரை உருவாக்க வேண்டியது என்பதே ஆகும்.


ரோகித், கோலி இடத்திற்கு யார்?


கோலி, ரோகித் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்றே கருதப்படுகிறது. மூன்று வடிவ போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரர்களான இவர்களது இரண்டு பேரின் இடத்திற்கும் மாற்று வீரர்களை உருவாக்க வேண்டியதே பிரதான சவால் ஆகும்.


ரோகித் மற்றும் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் ஆடினாலும் அவர்கள் இருக்கும்போதே அடுத்த தலைமுறைக்கான வீரரை உருவாக்க வேண்டியது கம்பீரின் தலையாய கடமை ஆகும். ஏனென்றால், தற்போது பல நாட்டு தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணியில் மூன்று வடிவத்திலான போட்டிகளிலும் ஆடும் வீரர்கள் மிக மிக குறைவாக உள்ளது.


தொடக்க வீரர், மிடில் ஆர்டர்:


சுப்மன்கில், ஜெய்ஸ்வால், இஷன் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன் என தொடக்க வீரர்களுக்கே ஒரு பெரும் போட்டி இருக்க ரிஷப்பண்ட், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் ஐயர். துருவ் ஜோரல், ரஜத் படிதார், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா என பேட்டிங்கில் தொடக்க மற்றும் மிடில் ஆர்டரில் வீரர்களை சரியாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்வதிலே கம்பீருக்கு பெரும் சவால் உள்ளது.


இவர்களுடன் அனுபவம் மிகுந்த ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், பும்ரா, சிராஜ் ஆகியோர் கலந்த கலவையாகவும் அணியை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். முன்பு இந்திய அணி எந்த வடிவிலான போட்டிகள் ஆடினாலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான வீரர்களே களமிறங்குவார்கள். ஆனால், சமீபகாலமாக டி20 தொடருக்கு முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட படையே களமிறங்குகின்றனர். மூன்று வடிவிலான போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழும் ஜடேஜாவும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கு நிகரான ஆல் ரவுண்டரை உருவாக்க வேண்டியதும் மிக மிக முக்கியமான சவால் ஆகும்.


டெஸ்ட் அணி:


கம்பீர் ஒரு அனுபவமிக்க வீரர் மற்றும் ஆலோசகர் என்பதால் அவர் அதிரடியான அணியாக மட்டுமில்லாமல் நிதானமான, சாதுர்யமான அணியாகவும் இந்திய அணியை கட்டமைக்க விரும்புவார் என்றே எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பட்டாசாய் கொளுத்தும் அதிரடி டி20 போட்டிகளுக்கு மட்டுமே பயனாகும்.


டெஸ்ட் போன்ற மனரீதியான சவால்களை எதிர்கொள்ளும் நீண்ட வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு அடுத்த தலைமுறை வீரர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். டி20 போட்டிகளில் ஆடுவதற்கு ஏராளமான வீரர்கள் தயார் நிலையில் இருந்தாலும், டெஸ்ட் போன்ற நீண்டவடிவிலான போட்டிகளில் ஆடுவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே வீரர்களை இந்திய அணி நிர்வாகம் போதியளவில் தயார் செய்யவில்லை என்றே கூற வேண்டும்.


மூத்த வீரர்களுக்கு மாற்று:


தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து இளம் வீரர்களை நன்றாக பட்டை தீட்டினால் மட்டுமே அவர்களால் இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களாக உருவெடுக்க முடியும். ஏனென்றால், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தூண்களாக திகழும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் 35 வயதை கடந்துவிட்டனர். முகமது ஷமிக்கும் 33 வயதாகிவிட்டது. இவர்கள் இன்னும் குறைந்த காலமே டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார்கள். இதனால், இவர்களுக்கு மாற்று வீரர்களை உருவாக்க வேண்டியது மிக மிக முக்கியமான சவாலாக கம்பீர் உள்ளது.


இந்திய அணியைப் பொறுத்தவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பொதுவாக ஒரே கேப்டனே பொறுப்பு வகிப்பார்கள். ஆனால், சமீபகாலமாகவே டி20 போட்டித் தொடருக்கு மட்டும் இந்திய அணிக்கு வேறு வேறு கேப்டன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். மற்றபடி, கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, கோலி, ரோகித் என இவர்களே பிரதான கேப்டன்களாக பதவி வகித்து வந்தனர்.


கேப்டன் யார்?


ஐ.பி.எல். அணியின் கேப்டன்களான சுப்மன்கில், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர். சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் என பல கேப்டன்கள் இருப்பதால் ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் சரியான கேப்டனை தேர்வு செய்வதே கம்பீருக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால் ஆகும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஒவ்வொரு தொடருக்கும் ஒரு வித அணியை தேர்வு செய்வதில் இருக்கும் சவாலை காட்டிலும், ஒவ்வொரு வடிவ தொடருக்கும் கேப்டனை தேர்வு செய்வதும் கம்பீருக்கு மிகப்பெரிய சவால் ஆகும்.


அதேபோல, வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கான போட்டியிலும் ஏராளமான இளம்வீரர்கள் இருப்பதால் அவர்களுக்கான தேர்வுகளிலும் கம்பீர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.