இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பிறகு, சிக்சர் மன்னன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
விரைவில் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்:
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், யுவராஜ் சிங் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு விட்டதாகவும் அவரது தந்தை யோகராஜ் சிங் அறிவித்துள்ளார். யோகராஜ் சிங் 'பாக் மில்கா பாக்' படத்தில் பணிபுரிந்தபோது மிகப்பெரிய புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பணிபுரிவதாக அவரது தந்தை யோகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனது மகன் தயாரிக்கும் பயோபிக் படத்திற்கு 'தி மேன் ஆஃப் தி லாங்கஸ்ட் ஹவர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் யுவராஜுக்கும் அவரது தந்தையான எனக்கும் இடையிலான உறவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இதில் இருவருக்குமான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். படத்தின் தலைப்பை யுவராஜ் சிங் முடிவு செய்துள்ளதாகவும், இப்போது இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் இயக்கி, தயாரிக்கும் இப்படம் அப்பா, மகன் இருவரையும் மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், யுவராஜ் சிங் கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், யுவராக் சிங்கின் வாழக்கை வரலாற்றில் ரன்பீர் கபூர் நடிப்பாரா இல்லையா என்பது முழுமையாக தெரியவில்லை.
யுவராஜ் சிங்கிற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டது. தோனியின் வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மூலம் புகழ் பெற்றவர்:
2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்தபோது யுவராஜ் சிங்கின் புகழ் உச்சத்தை தொட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துகளில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். யுவராஜின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால், அவரது 6 சிக்ஸர்களும் நிச்சயம் காண்பிக்கப்படும். இதே போட்டியில் யுவராஜ் 12 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாறு படைத்தார்.
2024 டி20 உலகக் கோப்பையில் பிராண்ட் அம்பாஸிட்டர்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தற்போது டி20 உலகக் கோப்பை 2024-ன் இணை நடத்தும் நாடான அமெரிக்காவில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பைக்கு பிராண்ட் அம்பாஸிட்டராக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யுவராஜ் கிரிக்கெட்டை ஊக்குவிக்க பல அமெரிக்க நிகழ்ச்சிகளிலும், பல போட்டிகளின் போது மைதானத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தும் மக்களின் மனதை கவர்ந்தார்.