2023 ம் ஆண்டு உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக்கான ஐபிஎல்லில் இரண்டு புதிய விதிகள் அமலுக்கு வந்தது. இந்த விதியில் முதல் விதி, ஒரு அணி 11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்களுடன் விளையாடலாம். போட்டியின் நடுவில், எந்த வீரருக்கும் பதிலாக மற்றொரு வீரர் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் இம்பாக்ட் வீரராக களத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், டாஸ் போடும் நேரத்தில், இரு அணிகளும் 4 மாற்று வீரர்களை குறிப்பிட வேண்டும். குறிப்பிடப்படாத வீரரின் பெயர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சர்வதேச போட்டிகளில் இந்த விதி அமல்படுத்தப்படவில்லை.
இரண்டாம் விதி:
அதேபோல் இந்தாண்டு ஐபிஎல்லில் மற்றொரு விதியும் அமலுக்கு வந்தது. அதில், எப்படி ஒரு வீரர் அம்பயரால் அவுட் கொடுக்கப்படும்போது அவுட்டா, இல்லையா என்பதை அறிய டி.ஆர்.எஸ் மூலம் ரிவ்யூ கொடுக்க முடியுமோ, அதேபோல், நோ பாலா இல்லையா, வைட் பாலா இல்லையா என்பதை அறிந்துகொள்ள டி.ஆர்.எஸ் விதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
டி20 கிரிக்கெட்டில் இருந்த அதே சூப்பர் ஓவர் விதி ஒருநாள் கிரிக்கெட்டிலும் அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் போட்டி டையானால், இரு அணிகளும் சூப்பர் ஓவரில் விளையாடலாம். இது போட்டியின் முடிவு வரும் வரை தொடரும்.
ஆண்டு இறுதியில் புகுந்த புதிய விதி:
இந்த ஆண்டு இறுதியில் புதிய விதியை அமல்படுத்துவதாக ஐசிசி அறிவித்தது. அதன்படி, இப்போது பந்துவீச்சாளர்களுக்கும் டைம் அவுட் விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, ஒரு ஓவரின் முடிவிற்கும் இரண்டாவது ஓவரின் தொடக்கத்திற்கும் இடையில் 60 வினாடிகளுக்கு மேல் இருந்தால் நடுவர் இரண்டு முறை எச்சரிப்பார். மூன்றாவது முறையாக தாமதம் ஏற்பட்டால், பந்துவீச்சு அணிக்கு அபராதமாக ஐந்து கூடுதல் ரன்கள் பேட்டிங் அணியின் ஸ்கோரில் சேர்க்கப்படும். சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இந்த விதி சோதனையாக அமல்படுத்தப்பட்டது.
சாப்ட் சிக்னல் விதி:
இந்த ஆண்டு மாற்றப்பட்ட மற்றொரு விதி சாப்ட் சிக்னல் ஆகும். மைதானத்தில் மூன்றாவது நடுவருக்கு ஆன் பீல்ட் நடுவர் கொடுத்த சாஃப்ட் சிக்னலை ஐசிசி ரத்து செய்துள்ளது. ஒரு வீரர் அவுட்டா அல்லது இல்லையா என்பதை ஆன் பீல்ட் அம்பயரால் தீர்மானிக்க முடியாவிட்டால், அவர் மூன்றாவது நடுவரின் உதவியைப் பெறுவார் என்பது முந்தைய விதி. இருப்பினும், இதற்காக ஆன்-பீல்ட் அம்பயர் மூன்றாவது நடுவருக்கு சாப்ட் சிக்னல் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது பீல்ட் அம்பயருக்கு சாஃப்ட் சிக்னல் கொடுக்க வேண்டாம். மூன்றாவது நடுவர் நேரடியாக முடிவெடுப்பார்.
ரெட் கார்டு:
பீல்டிங் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச்சை முடிக்காவிட்டால், 20வது ஓவரின் தொடக்கத்தில் ஒரு பீல்டர் ரெட் கார்டு காமித்து களத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை. சமீபத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்த ரெட் கார்டு விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
2024ல் புதிய விதி அறிமுகமா..?
கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க வரும் 2024ல் சில மாற்றங்கள் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.