இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்து விளையாடி வருகிறார். அவரது டெஸ்ட் வாழ்க்கையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் முதல் இரட்டை சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


விசாகப்பட்டினத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதம் அடித்து பல சாதனைகளை முறியடித்தார். இதன்மூலம், இந்தியாவுக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது 37 நாட்கள் மட்டுமே ஆகிறது. 


ஒற்றை ஆளாய் கெத்துக்காட்டிய ஜெய்ஸ்வால்: 


யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக வித்தைக்காட்டி கெத்து காட்டினார் ஜெய்ஸ்வால். இந்திய அணியின் மறுமுனையில் இருந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி பெவிலியன் திரும்பினர். மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 209 ரன்கள் எடுத்து ஆண்டர்சனின் பந்தில் அவுட்டானார். 


இந்தியாவுக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர்:


இந்திய அணிக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை வினோத் காம்ப்ளி பெற்றுள்ளார். கடந்த 1993ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக காம்ப்ளி இரட்டை சதம் அடித்தார். அப்போது அவருக்கு 21 வயது 35 நாட்கள் மட்டுமே. இந்த லிஸ்டில் இரண்டாவது பெயரும் வினோத்  ம்ப்ளியின் பெயரிலே உள்ளது. அதே கடந்த 1993ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்கள் எடுத்தார். அப்போது காம்ப்ளிக்கு 21 வயது 55 நாட்கள் ஆகும். 






இந்தப் பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது.  வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 220 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது கவாஸ்கரின் வயது 21 வயது 283 நாட்கள். இதற்குப் பிறகு தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 வயது 37 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 


இதுபோக 22 வயதுக்குள் ஜெய்ஸ்வால், ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை, துலீப் கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார்.






யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரில் மேலும் ஒரு சாதனை: 


இந்திய அணிக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த நான்காவது இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இவருக்கு முன் சவுரவ் கங்குலி, வினோத் காம்ப்ளி, கவுதம் கம்பீர் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.



  1. 1993ம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக வினோத் காம்ப்ளி இரட்டை சதம் அடித்திருந்தார்.

  2. 2007ல் பாகிஸ்தானுக்கு எதிராக கங்குலி 239 ரன்கள் எடுத்திருந்தார்.

  3. 2006ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கவுதம் கம்பீர் இரட்டை சதம் அடித்தார்.