உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது வருகின்ற ஜூன் மாதம் 3ம் தேது நடைபெறுகிறது. இந்த தொடருக்காக சமீபத்தில் பிசிசிஐ ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய அடியை பெற்றுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து விலகலாம் என தெரிகிறது. இந்த போட்டியில் உமேஷ் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவின் காயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பு உமேஷ் யாதவ் உடற்தகுதி பெறவில்லை என்றால், மாற்று வீரர் தேடுதலில் இந்திய கிரிக்கெட் வாரியம் களத்தில் இறங்கும்.
என்ன ஆச்சு..?
உமேஷ் யாதவ் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறது. கடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வில்லை. உமேஷ் யாதவ் கொல்கத்தா மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட அவரது உடற்தகுதி மற்றும் தொடை காயத்தில் இருந்து மீண்டு வருவதை பொறுத்தே அமையும்.
காயத்தால் அவதிப்படும் இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. பல முக்கிய வீரர்கள் பல்வேறு காயம் காரணமாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகியதால், உமேஷ் யாதவ் மற்றும் ரஹானேவை மீண்டும் அணியில் சேர்த்தது.
பேட்டிங் எப்படி..?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய பலத்துடன், சிறப்பான ஃபார்மில் உள்ளது. ஆஸ்திடேலிய அணி ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே போன்ற வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
அதேபோல், இந்திய அணி தங்கள் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, சுப்மான் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிறைய ரன்களை குவித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். முகமது ஷமி, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திரன் ஜடேஜா போன்றோர் பந்துவீச்சில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணி:
இந்திய அணி விவரம்: ரோகித்சர்மா (கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே
ஆஸ்திரேலிய அணி விவரம்: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்லிஷ், கவாஜா, லபுசக்னே, லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்