WTC Final 2023:  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்காக அணி வீரர்களை இரு அணிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளன. ஆனால், இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் விலகியுள்ளனர். தற்போது ஐ.பி.எல். தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல்.ராகுல் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் விலகினார். தற்போது அவருக்கு பதிலாக இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார். 


ஏற்கனவே இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக பந்து வீச்சாளர் பும்ரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் உலக்கோப்பை டெஸ்ட் போட்டி இறுதிப் போட்டியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கே.எல். ராகுலும் வெளியேறியுள்ளார். கே.எல். ராகுல் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரும் இடது கை பேட்ஸ்மேனுமான இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார். மிகவும் இளம் வீரரான இவர் இறுதிப் போட்டி அழுத்தத்தை எப்படி கையாளப்போகிறார் என்ற கேள்வி பலரும் எழுப்பி வருகின்றனர். 


இஷான் கிஷானுடன் இந்திய அணியில் கூடுதல் வீரர்களாக, ருத்ராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்). மேலும், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் சூர்யகுமார் யாதவ்- கூடுதல் வீரர்களாக உள்ளனர்.


இதில் ஜெய்தேவ் உனட்கட் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியது குறித்து இன்னும் வெளிப்படையான அறிக்கை வெளியிடப்படாததால் இவருக்கு பதிலாக திடீரென யாரையாவது சேர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அப்போது அவசர அவசரமாக யாரையாவது தேடிப்பிடிப்பதற்கு பதிலாக முன்கூட்டியே கூடுதல் வீரர்களில் முகேஷ் குமாரை இணைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.