இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அதாவது ஜூன் மாதம் 3ஆம் தேதி, லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததால், பேட், பவுலிங் மற்றும் கீப்பிங் என எதுவும் செய்யாமல் ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற புதிய கேப்டன் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.


இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, பலமான இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கிய அயர்லாந்து அணி  தனது முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, பின்னர் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 524 ரன்களைக் குவித்தது. அதில் ஓலி போப் இரட்டை சதம் விளாசினார். அவர் 208 பந்தில் 205 ரன்கள் சேர்த்தார். அதேபோல் பென் டக்கெட்டும் 178 பந்தில்  182 ரன்கள் விளாசினார். 


முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு, இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணியை 362 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி சார்பில் மெக் பிரைன் மற்றும் மார்க் அடையர் சிறப்பாக அரைசதம் விளாசினர். இவர்களால் அதான் அயர்லாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது.  மேலும் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான சாக் க்ராலி மற்றும் டக்கெட் ஜோடி போட்டியை முடிக்க 4 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டனர். இதனால் இந்த போட்டியை இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 


முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் ஜோஷ் டங், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 


ஸ்டோக்ஸ் முழங்கால் காயம் காரணமாக அயர்லாந்து அணி களமிறங்கிய இரண்டு இன்னிங்ஸிலும் பந்துவீசவில்லை, மேலும் பேட்டிங் செய்யும் வாய்ப்பையும் பெறவில்லை, ஏனெனில் இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது மற்றும் இரண்டாவது இன்னிங்ஸை 4 பந்துகளில் தொடக்க வீரர்கள் முடித்துவிட்டனர். 


இதனால் சர்வதேச அளவில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டன் பேட்டிங், பவுலிங் மற்றும் கீப்பிங் என எதையும் செய்யாமல் போட்டியை வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தகாரராகியுள்ளார்.