ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, நடப்பாண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கான அணிகளின் ஏலம் மற்றும் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் ஆகியவை ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், வீராங்கனைகளுக்கான ஏலம் மற்றும் தொடர் தொடங்கும் தேதி ஆகியவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
போட்டி அட்டவணை:
அதன்படி, ஆடவர்களுக்கான ஐபிஎல் தொடரை போன்று முதல்முறையாக நடைபெற உள்ள மகளிருக்கான பிரீமியர் லீக்கில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையில் மும்பையில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 22 போட்டிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் பர்போன் மற்றும் டி. ஓய். பட்டேல் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது.
வீராங்கனைகளுக்கான ஏலம்:
மகளிர் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டு வீராங்கனைகளுமே பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, தொடரில் பங்கேற்பதற்கான முன்பதிவிலும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக வெறும் 90 பேர்களுக்கான ஏலத்தில் பங்கேற்க, 1525 பேர் முன்பதிவு செய்தனர். அதிலிருந்து ஏலத்தில் பங்கேற்க 409 பேர் அடங்கிய பெயர் பட்டியலை பிசிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், 246 பேர் இந்தியர்கள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் 202 பேர், சர்வதேச போட்டிகளில் விளையாடதவர்கள் 199 பேர் மற்றும் 8 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து அணிகளுக்கு அதிகபட்சமாக 90 இடங்கள் உள்ளன. அதில். 30 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏலத்தொகை விவரங்கள்
வீராங்கனைக்ளுக்கான அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா மற்றும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் ஷஃபாலி வர்மா என 10 பேர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, எல்லிஸ் பெர்ரி, சோஃபி எக்லெஸ்டோன், சோஃபி டிவைன் & டீன்ட்ரா டோட்டின் ஆகிய 14 வீராங்கனைகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதற்கடுத்தபடியாக, அடிப்படி ஏலத்தொகையான 40 லட்ச ரூபாய் பட்டியலில் 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் எனும் அடிப்படை ஏலத்தொகை பிரிவுகளிலும் வீராங்கனைகள் ஏலத்தில் விடப்பட உள்ளனர்.
ஏலம் நடைபெற உள்ள தேதி:
5 அணிகளுக்காக விளையாட உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம், வரும் 13ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.