WPL 2025: ஆர்சிபியை கதறவிட்ட எக்லஸ்டோன் - சூப்பர் ஓவரில் உ.பி., த்ரில் வெற்றி - கதறி அழுத எல்லிஸ் பெர்ரி
RCB Vs UPW, WPL 2025: மகளிர் பிரீமியர் லீகின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியை உத்தரபிரதேச அணி சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

RCB Vs UPW, WPL 2025: தோல்வியை தாங்க முடியாமல் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கதறி அழுதது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெங்களூரு Vs உத்தரபிரதேசம்:
நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி மற்றும் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பொளந்து கட்டிய எல்லிஸ் பெர்ரி:
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான ஸ்மிருதி மந்தனான வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் டேனி வ்யாட் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். டேனி 41 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் எல்லிஸ் பெர்ரி எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் உத்தரபிரதேச அணி திகைத்து நின்றது. இதனால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை சேர்த்தது. எல்லிஸ் பெர்ரி இறுதி வரை ஆட்டமிழக்காமல், 56 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் உட்பட, 90 ரன்களை குவித்தார்.
தடுமாறிய உத்தரபிரதேசம்:
தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய உத்தரபிரதேச அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கிரண், தீப்தி சர்மா, ஸ்வேதா ஆகியோர் ஓரளவுக்கு ரன் சேர்த்தாலும், யாராலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் ஆட்டம் மெல்ல மெல்ல ஆர்சிபி பக்கம் சாய்ந்தது.
வெளுத்து வாங்கிய எக்லஸ்டோன்
கடைசி ஓவரில் உத்தரபிரதேச அணி வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டபோது, ரேணுகா சிங் வீசிய ஓவரை எக்லஸ்டோன் எதிர்கொண்டார். முதல் பந்தில் ரன் ஏதும் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தை சிக்சர் விளாசி அசத்தினார். நான்காவது பந்தில் பவுண்டரி பறக்க ஆர்சிபியின் தோல்வி நெருங்கியது. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்படும் போது, எக்லஸ்டோன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். போட்டி சமனில் முடியவே, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
வெற்றியை தேடிக்கொடுத்த எக்லஸ்டோன்:
தொடர்ந்து சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி, 6 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே சேர்த்தது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் துல்லியமாக பந்துவீசிய எக்லஸ்டோன், ஆர்சிபியின் ஸ்மிருதி மற்றும் ரிச்சா கோஷை திணறடித்தார். எவ்வளவு முயன்றும் அவர்களால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதனால் சூப்பர் ஓவர் முடிவில் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து, ஆர்சிபி அணி தோல்வியுற்றது.
கடைசி ஓவரில் 17 ரன்களை விளாசியதோடு, சூப்பர் ஓவரை வீசி வெற்றியை உறுதிப்படுத்திய எக்லஸ்டோன் ஆட்டநாயகியாக தேர்வானார்.
உடைந்து அழுத எல்லிஸ் பெர்ரி:
காயம் இருந்தபோது, அணிக்காக முழுமையான முயற்சியை கொடுத்த எல்லிஸ் பெர்ரி தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுதார். முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும், எல்லிஸ் பெர்ரி 81 ரன்களை விளாசினார். ஆனால், அதிலும் ஆர்சிபி அணி கடைசி ஓவரில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.