WPL RCB vs UPW: மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடரில் மும்பை, ஆர்சிபி அணிகள் ஆடும் போட்டிகளின்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

ஆர்சிபி - உபி வாரியர்ஸ்:

இன்று லக்னோவில் நடக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - உத்தரபிரதேச அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வரும் ஆர்சிபி அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள உத்தரபிரதேச அணியும் கட்டாய வெற்றி போட்டியில் மோதி வருகின்றன. 

இந்த போட்டியில் ஆர்சிபி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய கிரேஸ் ஹாரிஸ் - ஜார்ஜியா வால் ஆகிய இருவரும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். பவுண்டரிகளாக இருவரும் விளாச ஓவருக்கு 10 ரன்கள் என்று சென்றது. 

ரன்மழை:

கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, அடுத்து வந்த கிரண் நவ்கிரே சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால், உபி வாரியர்ஸ் ரன் ஜெட் வேகத்தில் எகிறியது. இதனால், 7 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்திருந்த உபி வாரியர்ஸ் அணி 12 ஓவர்களில் 140 ரன்களை கடந்தது. 

கிரண் நவ்கிரே 16 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே அவுட்டானாலும் தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பட்டாசாய் வெடித்தார். அவர் பவுண்டரிகளாக விளாச அரைசதத்தை கடந்தும் ரன்வேட்டையைத் தொடர்ந்தார். 

ஜஸ்டில் மிஸ்ஸான சதம்:

கிம் ஹார்த், ரேணுகா, சார்லட் டீன், எல்லீஸ் பெர்ரி, ஜார்ஜியா வார்ஹேம் சினேகா என யார் வீசியும் ஜார்ஜியாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், 200 ரன்களை உபி வாரியர்ஸ் அணி கடந்தது. உபி வாரியர்ஸ் அணிக்காக தொடர்ந்து அதிரடி காட்டிய ஜார்ஜியா சதத்தின் அருகில் நெருங்கியும் சதம் விளாச இயல முடியாமல் போனது. கடைசி பந்தில் அவர் சதம் விளாச 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் 2வது ரன்னுக்கு ஓடியபோது மறுமுனையில் கேப்டன் தீப்தி சர்மா ரன் அவுட்டானார். 

இதனால், ஜார்ஜியா வாலின் சத கனவு தகர்ந்தது. இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கி 20 ஓவர்களும் ஆடிய ஜார்ஜியா 56 பந்துகளில் 17 பவுண்டரி 1 சிக்ஸருடன் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

226 ரன்கள் டார்கெட்: 

ஆர்சிபி அணியின் சார்லட் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கினார். ஜார்ஜியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கட்டாயம் வெற்றியில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி 226 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.