WPL 2025 Points Table: மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க, பெங்களூர் மற்றும் மும்பை அணியிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மகளிர் பிரீமியர் லீக்:

நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள், நாக்-அவுட் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்காக, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க அணைத்து அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.

மும்பை - பெங்களூரு கடும் போட்டி:

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க 5 அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. ஆனால், நடப்பு சாம்பியனான பெங்களூரு மற்றும் முன்னாள் சாம்பியனான மும்பை இடையே தான் கடும் இழுபறி நிலவுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் வலுவாக முதலிடத்தில் இருந்தது. அதேநேரம், முதல் போட்டியில் தோல்வி, இரண்டாவது போட்டியில் வெற்றி என மும்பை மூன்றாவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தான், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக எல்லீஸ் பெர்ரி, 43 பந்துகளில் 81 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை தொடக்கத்தில் தடுமாறினாலும், நாட் - ஸ்கைவர் - ப்ரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இடையேயான கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தியது. இறுதியில் அமன்ஜோத் கவுர் அதிரடி காட்ட, 19.5 ஓவர்களில் மும்பை அணி இலக்கை எட்டி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு அணியின் ஹாட்ரிக் வெற்றிக் கனவு உடைந்தது.

WPL 2025 புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
பெங்களூர் 3 2 1 4 0.835
மும்பை 3 2 1 4 0.610
டெல்லி 3 2 1 4 -0.544
குஜராத் 3 1 2 2 -0.525
உத்தரபிரதேசம் 2 0 2 0 -0.495

டெல்லி அணி முன்னேறுமா?

டெல்லி அணியும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனாலும், ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதால், தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற, மீதமுள்ள கடைசி ஒரு போட்டியில் அந்த அணிக்கு பிரமாண்ட வெற்றி தேவைப்படுகிறது.

இன்றைய போட்டி:

இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் அணிகள் மோத உள்ளன. இதில் பிரமாண்ட வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முன்னேற டெல்லி அணி முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியுற்ற உத்தரபிரதேச அணி, முதல் வெற்றியை ருசிக்க ஆர்வம் காட்டுகிறது.