மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் குஜராத் அணி - உத்தபிரதேச வாரியர்ஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

பவுலிங்கில் மிரட்டிய குஜராத்:

இதையடுத்து ஆட்டத்தை கிரண் நவ்கிரே - வ்ரிந்தா தொடங்கினர். கிரண் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். அவர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரன்வேட்டையத் தொடங்கினர். ஆனால், அவர் 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். சிறிது நேரத்தில் வ்ரிந்தாவும் 6 ரன்னில் அவுட்டாக, அடுத்து கேப்டன் தீப்தி ஷர்மா - உமா சேத்ரி ஜோடி சேர்ந்தனர். 

22 ரன்னில் 2 விக்கெட் இழந்த நிலையில் சேர்ந்த இந்த ஜோடி சிறப்பாக ஆடினர். உமா சேத்ரி நிதானமாக ஆட கேப்டன் தீப்தி ஷர்மா அடித்து ஆடினார். மைதானம் பந்துவீச்சிற்கு நன்றாக ஒத்துழைக்க சயாளி, தியோந்தரா டோட்டீன், கேப்டன் கார்ட்னர், காஷ்வி கவுதம், தனுஜா, ப்ரியா மிஸ்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசினர். 

அசத்திய தீப்தி ஷர்மா:

தீப்தி ஷர்மாவிற்கு ஒத்துழைப்பு தந்த உமா சேத்ரி 27 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த தஹிலா டக் அவுநுட்டாக, கிரேஸ் ஹாரிசும் 4 ரன்னில் அவுட்டானார். உபி அணிக்காக தனி ஆளாக கேப்டன் தீப்தி ஷர்மா மட்டும் பவுண்டரிகளாக விளாசினார். கடைசியில் கேப்டன் தீப்தி ஷர்மாவின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. 27 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்த தீப்தி ஷர்மா ப்ரியா மிஸ்ரா பந்தில் வெளியேறினார். 

கடைசியில் ஸ்வேதா 16 ரன்கள் எடுக்க, அலானா கிங் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து உத்தரபிரதேசம் கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். 9வது விக்கெட்டிற்கு வந்த சைமா தாக்கூர் பவுண்டரிகளாக விளாசினார். இறுதியில் உத்தரபிரேதச அணி 20 ஓவர்கள் முடிவில்9 விக்கெட்டை இழந்து 143 ரன்களை எடுத்தது. ப்ரியா மிஸ்ரா அதிகபட்சமாக 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்.  தியோந்திரா டோட்டீன், கேப்டன் கார்ட்னர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார். 

வெற்றி பெறுமா?

முதல் போட்டியில் ஆர்சிபியிடம் 201 ரன்கள் அடித்தும் வெற்றியை பறிகொடுத்த குஜராத் அணியின் தோல்விக்கு மிக மோசமான ஃபீல்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் அந்த தவறுகைள அவர்கள் சரி செய்தனர். தற்போது 144 ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியுள்ளது.