மகளிர் பிரீமியர் லீக் 2024ல் பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற்ற இரண்டாவது அணியானது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. டெல்லி அணிக்காக ஜெமிமா ரோட்ரில்ஸ் அபாரமான பேட்டிங் செய்து 36 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ஆர்சிபி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 

இந்த வெற்றியின்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெற்றுள்ளது. மேலும், தற்போது புள்ளிகள் அட்டவணையில் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை அலங்கரித்துள்ளது. கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்தில் உள்ளது. 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றிபெற்றுள்ளது. நிகர ரன் ரேட்டில் மும்பையை விட டெல்லி முன்னிலையில் உள்ளது. இதன்காரணமாக இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

தரவரிசை போட்டிகள் வெற்றி  தோல்வி புள்ளிகள் ரன் ரேட்
டெல்லி கேப்பிடல்ஸ் (கு) 7 5 2 10 +0.918
மும்பை இந்தியன்ஸ் (கு) 7 5 2 10 +0.343
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 3 4 6 +0.027
UP வாரியர்ஸ் 7 3 4 6 -0.365
குஜராத் ஜெயண்ட்ஸ் 6 1 5 2 -1.111

போட்டி சுருக்கம்: 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜெமிமா 36 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உதவியுடன் 58 ரன்களும், நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த ஆலிஸ் கேப்ஸி 32 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவிடன் 48 ரன்களும் எடுத்தனர். இதுபோக, கேப்டன் மெக் லானிங் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு வழுவான அடித்தளம் அமைத்தது. 

டெல்லி கொடுத்த இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆர்சிபி அணியில்  ரிச்சா கோஷ் அரைசதம் அடித்தார். ஆனால் அவரால் வெற்றியைக் கொண்டுவர முடியவில்லை. 29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசினார். எல்லிஸ் பெர்ரி 32 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். சோபியா 33 ரன்கள் சேர்த்தார். ஜார்ஜியா வேர்ஹாம் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவர் த்ரில்: 

இந்தப் போட்டியின் கடைசி ஓவர் அனைவரையும் எகிற செய்தது. கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ரிச்சா அணிக்காக ஸ்ட்ரைக்கில் இருந்தார். அதேசமயம் டெல்லி ஜோனசனிடம் ஒப்படைத்தது. முதல் பந்தில் ரிச்சா சிக்சர் அடித்தார். இரண்டாவது பந்து புள்ளியாக மாற, மூன்றாவது பந்தில் டெல்லிக்கு விக்கெட் கிடைத்தது. ஆர்சிபிக்காக நான்-ஸ்டிரைக்கில் இருந்த திஷா ரன் அவுட் ஆனார். இதன்பின், நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுத்த ரிச்சா, ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆஃப்க்கு தகுதிபெற்றது.