WPL 2023, MI-W vs RCB-W: மகளிர் பிரிமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இதன்மூலம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஹெய்லி மேத்யூஸ் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 76 ரன்கள் அடித்து அணியை அதிரடியாக வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதே நேரத்தில், நாட் சீவர் பிரண்ட் 29 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான யாஸ்திகா பாட்டியா 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்திற்கு அடித்தளமிட்டார்.
மும்பை அணி - தொடர்ந்து இரண்டாவது வெற்றி
மகளிர் பிரிமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூர் அணி :
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 155 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ரிச்சா கோஷ் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். அதே நேரத்தில், ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளை அடித்தார்.
ஹெய்லி மேத்யூஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளரான ஹெய்லி மேத்யூஸ் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார். ஹெய்லி மேத்யூஸ் 4 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.சைகா இசக் மற்றும் அமெலியா கெர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். அதேசமயம், பூஜா வஸ்த்ரகர் மற்றும் நேட் சீவர் பிரண்ட் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
அணி விவரம்:
மும்பை இந்தியன்ஸ் மகளிர் (பிளேயிங் லெவன்): யாஸ்திகா பாட்டியா(விக்கெட் கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் (விளையாடும் லெவன்): ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹீதர் நைட், கனிகா அஹுஜா, மேகன் ஷட், ஸ்ரேயங்கா பாட்டீல், ப்ரீத்தி போஸ், ரேணுகா தாக்கூர் சிங்