மகளிர் பிரிமியர் லீக் தொடரின் முதல் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த புதிய தொடரானது வருகிற மார்ச் 4 முதல் 26 வரை இரண்டு மும்பை மைதானங்களில் விளையாடப்பட இருக்கிறது. 


இதற்கான வீரர்கள் ஏலம் வருகிற பிப்ரவரி 13 ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 25ம் தேதி அன்று நடந்த அணிக்களுக்கான ஏலத்தில் லக்னோவை சேர்ந்த அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.757 கோடிக்கு வாங்கியது.


இந்தநிலையில், லக்னோ சார்ந்த புதிய அணிக்கு பெயர், லோகோ மற்றும் அதன் பயிற்சியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவலை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி, லக்னோ சார்ந்த புதிய அணிக்கு ‘உபி வாரியர்ஸ்’ என பெயர் வைத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்ற அஞ்சு ஜெயின் உதவி பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்லே நோஃப்கே பந்துவீச்சு பயிற்சியாளராகவும், நான்கு முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை சேர்ந்த லிசா ஸ்டாலேகர் அணியின் ஆலோசகராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • தலைமை பயிற்சியாளர்: ஜான் லூயிஸ்

  • ஆலோசகர்: லிசா ஸ்தலேகர் 

  • தவி பயிற்சியாளர்: அஞ்சு ஜெயின்

  • பந்துவீச்சு பயிற்சியாளர்: ஆஷ்லே நோஃப்கே


உபி வாரியர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள லூயிஸ், தற்போது இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். சர்வதேச மற்றும் உள்நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி 1200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2021ல் இங்கிலாந்து ஆண்கள் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். 
 
போட்டி விளையாடும் முறை: 


மகளிர் ஐபிஎல்-லில் 5 அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில் லீக் மற்றும் பிளேஆஃப் சுற்றுகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரை விளையாடுகின்றன. அதில், வெற்றிபெறும் அணி முதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். 


அணிகளின் விவரங்கள்:


 அதிகப்பட்சமாக அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கு அதானி ஸ்போர்ட்ஸ் லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தொடர்ந்து, மும்பை அணியை ரூ. 912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், பெங்களூரு அணியை பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. அதேபோல், டெல்லி அணியை  ரூ.810 கோடிக்கு jsw gmr கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல்  ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த அணிக்களுக்கான ஏலத்தின் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4669.99 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.