சர்வதேச டி-20 போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.


அயர்லாந்து சுற்றுப்பயணம்:


ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது.


இந்திய அணி வெற்றி:


இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், தொடக்கவீரரான பால்ப்ரைன் அதிரடியாக விளையாடி 72 ரன்களை குவித்தார். ஆனால், அவருக்கு உறுதுணையாக எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரசித், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப்சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என கைப்பற்றியது.


அர்ஷ்தீப் சிங் சாதனை:


இரண்டாவது டி-20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அயர்லாந்து வீரர், பால்ப்ரைன் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதன் மூலம் டி-20 போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 33 போட்டிகளில் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். சர்வதேச அளவில் குறைந்த டி-20 போட்டிகள் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த வேகப்பந்து விச்சாளர்களின் பட்டியலில் தென்னாப்ரிக்காவின் லுங்கி நிகிடி முதலிடம் பிடித்துள்ளார். அவர் வெறும் 32 போட்டிகள் இந்த சாதனயை நிகழ்த்தியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் அர்ஷ்தீப் சிங் உள்ளார். அதேநேரம், குறைந்த டி-20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில், குல்தீப் யாதவ் முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது, வெறும் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் இந்த சாதனை படைத்தார். 


அயர்லாந்து கேப்டன் சொதப்பல்:


இதனிடையே, அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் டி-20 போட்டிகளில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், ரன் ஏதும் எடுக்காமலேயே அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டிகளில் அதிகமுறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். அதன்படி, அவர் 13 முற ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அவரை தொடர்ந்து கெவின் ஓ பிரையன் (12), சகப்வா (11) மற்றும் சவுமியா சர்கார் (11) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.