World Cup 2023 Points Table: நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில், இந்திய அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, நேற்று நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
20 வருட ஏக்கம் முடிந்தது..!
தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2003ம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான பயணத்தை இந்திய அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதோடு, நடப்பு தொடரில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளது.
புள்ளிப்பட்டியல் விவரம்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
இந்தியா | 5 | 5 | 0 | 10 |
நியூசிலாந்து | 5 | 4 | 1 | 8 |
தென்னாப்ரிக்கா | 4 | 3 | 1 | 6 |
ஆஸ்திரேலியா | 4 | 2 | 2 | 4 |
பாகிஸ்தான் | 4 | 2 | 2 | 4 |
வங்கதேசம் | 4 | 1 | 3 | 2 |
நெதர்லாந்து | 4 | 1 | 3 | 2 |
இலங்கை | 4 | 1 | 3 | 2 |
இங்கிலாந்து | 4 | 1 | 3 | 2 |
ஆப்கானிஸ்தான் | 4 | 1 | 3 | 2 |
தடுமாறும் நட்சத்திர அணிகள்:
போட்டியை நடத்தும் இந்தியா உடன் சேர்ந்து நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தொடர் வெற்றிகளை பெற முடியாமல் தடுமாறி வருகின்றன. மேலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெறும், 0.002 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை விட ஒரு இடம் மேலே என புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இங்கிலாந்து நீடிக்கிறது.
இன்றைய போட்டி:
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிப்போட்டிக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது இரு அணிகளுக்கும் கட்டாயமாக உள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 6வது இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியுற்றால், இங்கிலாந்து அணி 10வது இடத்திற்கு தள்ளப்படலாம்.