World Cup 2023: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை இல்லாத அளவிற்கு, நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.


உலகக் கோப்பை:


இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின், ஒருநாள் உலகக் கோப்பை 50 சதவிகிதம் அளவு நடந்து முடிந்துள்ளது. போட்டியின் தொடக்கத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நிச்சயம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என பெரும்பாலான வல்லுநர்கள் கணித்தனர். ரசிகர்களும் இதையே எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தற்போது பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. 


தொடர் தோல்விகள்:


பாகிஸ்தான் அணி நிச்சயம் அரையிறுதிக்கு தகுதி பெறும் என பலரும் கணித்ததை உறுதி செய்யும் விதமாகவே, விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. ஆனால், அதைதொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை பதிவு செய்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு மற்று பவுலிங் என அனைத்திலும் அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. கேப்டன் பாபர் அசாம் களத்தில் செயல்படும் விதமும் கடும் விமர்சனங்களுக்காளியுள்ளது.


புள்ளிப்பட்டியல் விவரம்:


தொடக்கத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை வீழ்த்தினாலும், அடுத்தடுத்து தோல்விகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. அதன்படி, தற்போது 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நீடிக்கிறது. தற்போதைய நிலையே தொடர்ந்தால், லீக் சுற்று முடிவிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறக்கூடும். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.


அரையிறுதிக்குச் செல்லுமா பாகிஸ்தான்?


அரையிறுதிக்குச் செல்வது என்பது பாகிஸ்தான் அணிக்கு இனி, மற்ற போட்டிகளின் முடிவைச் சார்ந்தே பெரும்பாலும் உள்ளது. அதற்கும் முன்னதாக தங்களது தொடர் தோல்விக்கு அந்த அணி முடிவுகட்ட வேண்டும். வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அந்த 3 போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டும். அதன் பிறகு மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை சார்ந்து தான் பாகிஸ்தானின் வாய்ப்புகள் உள்ளன. 


ஆஸ்திரேலிய வாய்ப்பு கொடுக்குமா?


5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தற்போது 3 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நிடிக்கிறது. இன்னும் 4 போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. அவற்றில் ஆஸ்திரேலிய அணி பெரும் தோல்விகளை கண்டால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு ஏற்படும்.



  • ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளிலாவது தோல்வி பெற வேண்டும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு ஏற்படலாம்

  • ஒருவேளை ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் தோல்வி பெற்றால், புள்ளிகள் அடிப்படையில் அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெறும் 


நியூசிலாந்தை கட்டுப்படுத்துவது யார்?


நடப்பு உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வரும் நியூசிலாந்து 4 வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. அந்த விளையாடும் போட்டிகளின் முடிவுகளும் பாகிஸ்தானுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.



  • நியூசிலாந்து அணி தனக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் தோல்விய தழுவ வேண்டும். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களுக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது தலா இரண்டு போட்டிகளிலாவது தோல்வியை சந்திக்க வேண்டும்.