1. உலகக் கோப்பையின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா:


கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 24 வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. இந்த போட்டியில், நெதர்லாந்து அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றி நடப்பு உலகக் கோப்பை தொடரின் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக  பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 44 பந்துகளில்  106 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.


2. அதிவேக சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல்:


உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரராக ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், வெறும் 40 பந்துகளில் 100 ரன்களை கடந்தார்.


அதன்படி, மொத்தம் 44 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என மொத்தம் 106 ரன்கள் குவித்தார். முன்னதாக, அதிவேக சதம் அடித்த வீரராக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஐடன் மார்க்ரமின் சாதனையை இதன் மூலம் கிளென் மேக்ஸ்வெல் முறியடித்தார்.



3. இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய உலகக் கோப்பை தோல்வி:


கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 170 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணியிடம் சரணடைந்தது. இது இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய உலகக் கோப்பை தோல்வியாக கருதப்படுகிறது.


முன்னதாக, கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் போது தென்னாப்பிரிக்க அணியிடன் தான் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை பதிவு செய்தது கவனிக்கத்தக்கது.


 


4. இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர்:


 


இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார் முகமது ஷமி. 


இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற போட்டியி நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது இந்திய அணி. அந்த போட்டியில் மொத்தம் 10 ஓவர்கள் வீசிய இந்திய பந்து வீச்சாளார் முகமது ஷமி 54 ரன்கள் கொடுத்து அபாரமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.


இதற்கு முன்னதாக, இந்திய வீரர்கள்  கபில் தேவ், ஆஷிஷ் நெஹ்ரா, வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங் மற்றும் யுவராஜ் சிங் போன்றோர் இந்த சாதனையை தங்கள் வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 


5. ஏபி டி வில்லர்ஸின் சாதனையை முறியடித்த  குயின்டன் டி காக் :



உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை குயின்டன் டி காக் பெற்றுள்ளார்.


தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்  இந்த தொடரில் மூன்றாவது சதம் அடித்ததன் மூலம், இதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரராக இருந்த ஏபி டி வில்லர்ஸின் சாதனையை முறியடித்தார்.


அதன்படி, இலங்கை அணிக்கு எதிராக 100 ரன்கள், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 109 ரன்கள், வங்கதேச அணிக்கு எதிராக 174 ரன்கள் எடுத்தன் மூலம் குயின்டன் டி காக் இந்த சாதனையை செய்துள்ளார்.


6.  டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ்  பார்ட்னர்ஷிப்:



கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து 259 ரன்கள் எடுத்தனர். அதன்படி அவர்கள் இருவரும் 33. 5 ஓவர்கள் வரை களத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஷேன் வாட்சன் மற்றும் பிராட் ஹாடினின் ஆகியோர் 183 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான்  ஆஸ்திரேலிய அணி அமைத்த மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.


 


7. உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்தார்



டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி 93 பந்துகளில் மொத்தம் 104 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் 5 சதங்கள் அடித்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை அவர் முறியடித்தார்.


 


8. உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வங்கதேச வீரர் என்ற பெருமையை மஹ்முதுல்லா பெற்றார்



கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. இந்த போட்டியில் வங்கதேச வீரர் மஹ்முதுல்லா சதம் அடித்தார்.


அதன்படி 111 பந்துகளில் 111 ரன்களை குவித்தார். மஹமுதுல்லாவின் மூன்றாவது உலகக் கோப்பை சதம் இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வங்கதேச வீரர் என்ற பெருமையை மஹ்முதுல்லா பெற்றார்.


 


9. குயின்டன் டி காக் உலகக் கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோரைப் பெற்ற விக்கெட் கீப்பர்


தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் இந்த உலகக் கோப்பையில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.


அதன்படி,கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி  வஙகதேச அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில், 140 பந்துகளில் 174 ரன்கள் எடுத்தார்.  இதுவே உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் எடுத்த அதிக தனி நபர் ஸ்கோராக உள்ளது.


 


10. உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அதிக ஸ்கோரை சேஸ் செய்தது


கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. 


இந்த போட்டியில் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவே  உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சேஸ் செய்ததுதான் அதிகபட்ச ஸ்கோர்.