டி20 உலகக்கோப்பை தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். இறுதிப்போட்டியில் மட்டுமில்லை இந்த தொடர் முழுவதுமே மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். தொடர் நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டிருந்தது.
இவ்வளவு சிறப்பாக ஆடி ஒரு அணிக்கு உலகக்கோப்பையையே வென்று கொடுத்த டேவிட் வார்னரை அணியிலிருந்து ஓரங்கட்டிய பெருமை சன்ரைசர்ஸ் அணியையே சேரும். ஐ.பி.எல் இல் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் ஆடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அணி வென்றிருக்கும் ஒரே ஒரு கோப்பையும் டேவிட் வார்னர் வென்று கொடுத்ததே. ஆனால், அதையெல்லாம் எண்ணாமல் சன்ரைசர்ஸ் நிர்வாகம் டேவிட் வார்னரை கடுமையாக நடத்தியிருந்தது.
நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனின் தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் அணி கடுமையாக சொதப்பியது. தொடர் தோல்விகளை சந்தித்தது. அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்தார். இதனால் அதிருப்தியடைந்த சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் டேவிட் வார்னரை அதிரடியாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் ப்ளேயிங் லெவனிலிருந்தும் வெளியேற்றி அதிர்ச்சியளித்தது. இத்தனை வருடங்களாக கேப்டனாக இருந்த வீரர் திடீரென மற்ற வீரர்களுக்கு வாட்டர் பாட்டில் தூக்கி செல்லும் வீரராக மாறிப்போயிருந்தார். இதுவே ரசிகர்களை கலங்க செய்திருந்தது. கொரோனா காரணமாக ஐ.பி.எல் தடைபடவே, இரண்டாம் பாதி ஐ.பி.ல் சில மாதங்களுக்கு பிறகு சமீபமாக UAE இல் நடந்து முடிந்தது.
இந்த இரண்டாம் பாதியில் டேவிட் வார்னருக்கு கேப்டன் பதவி வழங்கப்படாவிட்டாலும் மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த இரண்டாம் பாதியிலும் டேவிட் வார்னர் கொஞ்சம் தடுமாறவே மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த முறை அணிக்காக தண்ணீர் தூக்கியதை போல இந்த முறை அணிக்காக கேலரியில் அமர்ந்து கொடியசைத்து கொண்டிருந்தார். ஆனால், எந்த இடத்திலும் அணியின் உத்வேகத்தை குலைக்கும் வகையில் சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக வார்னர் பேசவே இல்லை. தன்னுடைய அதிருப்தியையும் கூட வெளிக்காட்டவில்லை.
நீங்கள் ஏன் ஆடவில்லை? என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேட்டபோது, நான் இனிமேல் இந்த அணிக்காக ஆடுவேனா என தெரியாது. ஆனால், நீங்கள் எப்போதும் போல இந்த அணியை ஆதரிக்க வேண்டும் என கூறி ரசிகர்களின் அன்பை அள்ளியிருந்தார்.
ஐ.பி.எல் முடிகிறது. உலகக்கோப்பை தொடங்குகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓரங்கட்டப்பட்ட வார்னர் இப்போது மஞ்சள் ஜெர்சியில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்குகிறார். அவர் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால், அவர்தான் அந்த அணி வெல்வதற்கு முழுமுதற் காரணமாக அமைந்தார். மொத்தம் 289 ரன்கள். 3 அரைசதங்கள். மூன்றுமே மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள்! இந்த தொடரில் பாபர் அசாமுக்கு பிறகு அதிக ரன்களை அடித்த வீரராக உயர்கிறார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்கிறது. தொடர் நாயகன் விருது வார்னரை தேடி வருகிறது. ஓரங்கட்டப்பட்ட அதே துபாய் மைதானத்தில் உலகக்கோப்பையுடன் டேவிட் வார்னர் கம்பீரமாக போஸ் கொடுத்தார்.
இந்நிலையில், இத்தனை நாளாக தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசாமல் இருந்த வார்னர் இப்போது பேசியுள்ளார். 'சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்தது. அதுவும் எதற்காக அணியிலிருந்து வெளியேற்றுகிறார்கள் என்கிற காரணத்தையே சொல்லாமல் வெளியேற்றியது வேதனையாக இருந்தது. நான்கு போட்டிகளில் ரன் அடிக்காததற்காக வெளியேற்றப்பட்டேனா? நான் அந்த அணிக்காக 100 போட்டிகளில் ஆடியிருக்கிறேன். ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கிறோம். வீரரின் தேர்வில் அவரின் கடந்த கால வரலாறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ரசிகர்கள் எப்போதும் போல அன்பை பொழிந்தார்கள், ஆதரவளித்தார்கள். அவர்களுக்காகதானே ஆடுகிறோம்!'
இவ்வாறு டேவிட் வார்னர் பேசியிருக்கிறார். முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணியின் மீதான தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அடுத்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் ஆடுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி டேவிட் வார்னருடன் சமரசம் செய்வார்களா? நடந்தவற்றை மறந்து மீண்டும் சன்ரைசர்ஸுக்கு ஆட டேவிட் வார்னர் ஒப்புக்கொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.